வெள்ளி, 31 ஜூலை, 2015

Statisticsஸின் வாழ்க்கை தத்துவம்...!

Average (Mean, Median, Mode), Probability, Percentages என்றெல்லாம் நாம் statistics படித்தோமே.. அதில் வாழ்க்கை தத்துவம் உண்டா..?
நான் ஒரு நாள் இரவு நடந்து வந்து கொண்டிருக்கும் போது மழை..! அருகில் ஸ்லம் ஏரியாவில் இருந்த ஒரு குடிசை வீட்டின் வாசலில் ஒதுங்கினேன்.. உள்ளே இருந்த கிழவர்:
“உள்ள வந்திருங்க..! மழ ஜாஸ்தியாவுது போல..!”
உள்ளே இரண்டு பெண்மணிகள் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, நான் சங்கடத்தோடு ஓரமாய் நின்றேன்... திடுக்கென்று காலின் மேல் ஏதோ ஓடும் உண்ர்வு..! சின்ன பாம்பு..! பயத்தில் நான் காலை உதறி... “ஊ...! பாம்பு....!”
கிழவர்: “சார்.. இப்படி பயப்படறீங்க...! பாம்பு, பூரான், தேரை அல்லாம்தான் வரும் மழை பேஞ்சா…!” அசால்ட்டாய் சொல்லி சிரித்தார்...!
கூரை வீட்டில் ஓரமாய் தண்ணீர் ஒழுகுவது பார்த்து நான்: “தண்ணி ஒழுவுதே..! எப்படி ராத்திரி தூங்குவீங்க..?”
“பொம்பளைங்கள நடுல வுட்டு நானும் என் பையனும் ஓரம் பட்த்துக்குவோம் சார்..! அவன் ஒரு 200 மில்லி போட்டுனு வந்து மட்டையாயிட்டான்னா இன்னா தண்ணி வந்தாலும் தூங்குவான்..! நான், தோ பாருங்க... கீழ நெறியா சாக்கு போட்டு, அதுக் மேல பாய் போட்டு பட்த்தன்னா ஒண்ணியும் ஆவாது..!” சிம்பிளாய் சொன்னார்..!
“பயங்கர மழை வந்தா..? தண்ணி ரொம்ப ஒழுவுச்சுன்னா கஷ்டமாயிடாது..? அப்ப என்ன பண்ணுவீங்க...?”
கிழவர் என்னை மௌனமாக சில கணங்கள் பார்த்தார்.. கேட்டிருக்க வேண்டாமோ..?
கிழவர் சொன்னார்: “அப்போ இன்னா பண்றது...? அல்லாரும் தூங்காம நைட்டு பெஞ்சு மேல் குந்திகினு மழைய பாத்துன் கெடக்க வேண்டித்தான்..! ஆனா.. நம்மூர்ல அது மாதிரி அட மழை வருசத்துக்கு மூணு நாலு நாள்தானே சார் வருது..? அத்து பெரிய கஸ்டமா இன்னா..?”
அதானே..? மூணு, நாலு நாள் என்பது ஒரு வருடத்தின் மொத்த நாட்களில் 1% தானே..? அதை நினைத்து பாக்கி 99%டில் ஏன் கவலைப் பட வேண்டும்..?
Statistics..! இப்படி நாமும் நம் வாழ்க்கை பிரச்சனைகளை statisticsஸாக பார்த்தோமானால் எல்லாம் சிறியவை தான்..!
இந்திய மக்களின் average (Mode) வருமானத்தை விட நம் வருமானம் 70-80% அதிகம்..! என்னதான் பெரிய பிரச்சனை வந்தாலும் நமக்கு 3 வேளை சாப்பாடு கிடைக்காமல் போவதற்கான probability 0.00001% தான்..! ஆபீஸில் நம் பாஸ் நம்மைத் திட்டுவது 5% நாட்களுக்கு குறைவே..! இரவில் கரெண்ட் போய் கஷ்டப்படுவது 1%க்கும் குறைவான நேரங்களே..! etc..!
இப்படி statisticsஸாக பார்த்தோமானால், நம் எல்லா பிரச்சனைகளும் சிறியவை..! மிக மிகச் சிறியவை..! ஆனால் நாமோ அவற்றை பூதக் கண்ணாடி மூலம் பார்த்து மருள்கிறோம்..! புலம்புகிறோம்..!
படிப்பறிவில்லாத ஒரு ஏழைக் கிழவர் எனக்கு statisticsஸில் இருந்த வாழ்க்கை தத்துவத்தை விளக்கி விட்டார்..!!

கருத்துகள் இல்லை: