சனி, 17 அக்டோபர், 2015

புனித நதி..


அந்த நதி
ஓடிக்கொண்டே
தான் இருக்கிறது..

வினாடிகளையும்
மணித்துளிகளையும்
நாட்களையும்
காலத்தையும் கடந்து
நிற்காது ஓடிக்கொண்டே
தான் இருக்கிறது...

புராணக்கதைகளையும்,
நூற்றாண்டு வரலாறுகளையும்
தன்னில் சுமந்து
ஓடிக்கொண்டே
தான் இருக்கிறது...

அதன் மேனி சுமக்காத அழுக்கா?
பொங்கி அழிக்காத கரையோர வாழ்விடமா?
வளப்படுத்தாத பரப்புகளா?
வாழ்வளிக்காத உயிர்களா?

புனிதம் என்று போற்றுவோரும் உண்டு..
சாக்கடை என்று தூற்றுவோரும் உண்டு..

அது பார்த்துவிட்டது..
ஆர்ப்பாட்டமான அகோரிகளையும்..
அமைதியான சாதுக்களையும்...

கடவுளர்களும் தொழுதுள்ளனர்..
கடைகோடி மனிதர்களும்
கால் நனைத்துள்ளனர்..

புத்துயிர்களும் தினம் நீராடுகின்றன..
உயிரற்ற உடல்களும் தினம் மிதக்கின்றன..

எது எவ்வாறாயினும்
எது எப்படியாயினும்  
அது என்றும் மாறாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது..

ஆம்..
கங்கை என்றும்
கங்கையாகவே.....

சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: