வியாழன், 15 அக்டோபர், 2015

அந்த ஆலமரம்...

காணாமல் போயிருந்தது
அந்த ஆலமரம்...

ஊர்கூடி ஒன்றுபட்டு
வழக்குரைத்த மரத்தடி மேடை..

நண்பர்கள் புடைசூழ நாளும்
விளையாடிய இடம்..

இலைப்பறித்து பங்கிட்டு
பந்தியிட்ட மரத்தடி கோயில்..

கோபம்கொண்ட நாட்களில்
பஞ்சுமெத்தையான நிழல்வெளி..

பரந்து விரிந்து விழுதுகள் இடை
கண்ணாம்பூச்சி ஆட்ட நினைவுகள்..

தனிமையின் அமைதியில் கவிதையோடு
இசை தந்த பறவைகள்...

சடுதியில் இல்லாமல் போனது..

வளம்தருவோம் என்றுசொல்லி
வந்த வெளிநாட்டு நிறுவனத்தால்..

காணாமல் போயிருந்தது
அந்த ஆலமரம்...

பால்யத்தின்நினைவுகளை
எப்போதும் தாலாட்டும் அதன்
விழுதுகளும்...

சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: