சனி, 29 நவம்பர், 2014

எப்படி நடக்க வேண்டும் ...? அறிவின் படியா .. மன சாட்சியின் படியா ... எது சிறந்தது .. ?


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.

தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.


அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் அடிகுழாய் ஒன்றும், அதன் அருகில் ஒரு சிறு வாளியில் தண்ணீரும் இருந்தன.


அந்த அடிகுழாயில் ஒரு அட்டை தொங்கிக் கொண்டிருந்தது ..!


அந்த அட்டையில், “இங்குள்ள சிறு வாளியில் உள்ள தண்ணீரை அந்த அடிகுழாய்க்குள் ஊற்றிவிட்டு அடித்தால் தண்ணீர் வரும். தாங்கள் தேவையான தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் வாளியில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்” என்று எழுதப்பட்டிருந்தது.


அந்த அடிகுழாயோ மிகப் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் இந்தச் சிறு வாளியிலிருக்கும் தண்ணீரும் நாம் அருந்தாமல் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும். நாமும் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணம் மேலோங்கியது.
அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று `அறிவு` கூறியது. 


ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த அடிகுழாய் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போய்விடுமே... நாம் இதற்குக் காரணமாகி விடுவோம் என்று `மனசாட்சி` எச்சரித்தது.

அவன் மனசாட்சி முடிவுக்குப் பின் யோசிக்கவில்லை. அந்த அடிகுழாயில், சிறு வாளியிலிருந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீரைக் குடித்தான். அந்தச் சிறு வாளியிலும் தண்ணீரை நிரப்பி வைத்தான். இப்போது அவன் மனமும் நிறைந்திருந்தது.


இன்று கிடைக்கும் நன்மை அனைத்தையும் நாமே முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை இருக்கக் கூடாது மனசாட்சிப்படி நடக்கவேண்டுமென என்று இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.


நாம் நம்முடைய வாழ்க்கையில் அனுபவித்ததை - கற்று உணர்ந்தவைகளை -அடுத்து வரும் தலைமுறையினரும் - பிறரும் - பயன்படுத்த விட்டுச் செல்ல வேண்டும்...!




1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

நாம் நம்முடைய வாழ்க்கையில் அனுபவித்ததை - கற்று உணர்ந்தவைகளை -அடுத்து வரும் தலைமுறையினரும் - பிறரும் - பயன்படுத்த விட்டுச் செல்ல வேண்டும்...!= அருமையான பதிவு. நன்றி.