சனி, 29 நவம்பர், 2014



வீடு

(சிறுகதை ! )

மாமனார் வீட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கும்போது காலை ஒன்பது மணி. ஆட்டோ சத்தம் கேட்டு அவன் மனைவிதான் வந்து கதவைத் திறந்தாள். பின்னாலேயே வந்தார் மாமனார். “அடடே...வா...வா...” அவருடைய வரவேற்புக்கு சிரிப்பையே பதிலாகத் தந்து விட்டு சூட்கேஸ்களை உள்ளே கொண்டு போய் வைத்தான். பின்பக்கம் போய் சிகரெட் நாற்றம் போக வாய் கொப்பளித்து விட்டு வந்து முன் அறையில் அமர்ந்தான்.
அவன் வருகை தந்த பூரிப்பை மறைக்க முடியாமல் அவன் மனைவி டீ போட உள்ளே விரைந்தாள். மாமனாரும் மாமியாரும் அவன் ஆசுவாசப் படுத்திக்கொண்டு உட்காரும் நேரத்துக்காக காத்திருந்தவர்கள் போல அமர்ந்திருந்தனர்.
“அப்பறம்... டிரெயின் கரெக்ட் டயத்துக்கு வந்துச்சா?”
“இல்ல மாமா... ஒரு மணி நேரம் லேட். கோயமுத்தூர் ஸ்டேஷன்ல நுழையும்போது மணி ஆறரை. ஆட்டோ புடிச்சு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வந்து நேரா உடுமலை பஸ்ஸப் புடிச்சேன். பளய பஸ் ஸ்டாண்டில எறங்குனப்போ மணி எட்டே முக்கால்... அங்கியே ஆட்டோ கெடச்சது...” உரையாடலை விரைவாக முடிக்க வேண்டும் போல இருந்தது அவன் பேச்சு.
“முந்தா நேத்து கௌம்புன `மங்களா'வா...? இல்லே, கேராளவுல வந்தியா...?” மாமனார் அவனுக்குத் தாய்மாமன்தான். அவன் சிறுவனாயிருந்த போதிருந்தே ஒருமையில் அழைக்கப்பட்ட பழக்கம். திருமணப் பேச்சு துவங்குவதற்கு முன்வரை அவனை ‘வாடா போடா’ என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார். எனவே அவனுக்கு வித்தியாசமாகப் படவில்லை.
“மங்களாதான் மாமா... கேரளாதான் கோயமுத்தூர்ல நிக்கிறதில்லையே...” இன்னும் உடம்பு தடதடத்துக் கொண்டேயிருந்தது.
ஆண்டுக்கொருமுறைதான் என்றாலும் ரயில் பயணம் சொல்ல இயலாததாய்த்தான் இருக்கிறது. காலை பத்து மணிக்கு டில்லியில் ஏறினால் இரண்டாவது நாள் காலை ஆறுமணிக்கு கோயமுத்தூர். நாற்பத்து நான்கு மணி நேர ரயில் பயணம். இரண்டு முழுப்பகல்கள், இரண்டு முழு இரவுகள். வீடு சேர்ந்து ஒருநாள் ஆனபின்னும் உடம்பின் ஆட்டம் தீராது. மூன்று நாள் பயணம் போலத் தோன்றும்.
“ஏன் லெட்டரே போடலே...? எம்பொண்ணு தெனம் போஸ்ட்மேனுக்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாந்தா... ஒரு நாலுவரி எழுதிப்போட நேரமில்லாமப் போச்சா... ?” மாமியார் - அத்தை தன் பங்குக்கு வாயைத் திறந்தார்.
``லெட்டர் போடக்கூடாதுன்னு ஒண்ணுமில்ல... இதா... இன்னிக்குப் பொறப்படலாம், நாளக்கிப் பொறப்படலாம்னு நாள் போயிருச்சு. சரி, லெட்டர் போடாமெத் திடீர்னு போய் நிக்கலாமேன்னு தோணுச்சு...” சிரித்துக்கொண்டே சொன்னான்.
“எத்தன நாள் லீவு...?” டீயை வைத்தவாறே கேட்டாள் மனைவி.
“என்ன... வளக்கம் போல பதினஞ்சு நாள்தா... அதுல ரெண்டு நாள் போச்சு அடுத்த வெள்ளிக் கௌம புறப்புடணும். மங்களாவுக்கு ரிடர்ன் டிக்கெட் எடுத்துட்டு வந்துட்டேன். ஞாயித்துக் கௌம போய்ச் சேந்தா, திங்கக் கௌம ஆபீசுக்குப் போக சரியா இருக்கும்.”
“ஏன்... இன்னும் ஒரு வார லீவு போட்டுட்டு வர்ரது...? வர்றதே வருசத்துக்கு ஒருக்கா... அதுல வேற கால்ல வென்னி ஊத்துனாப்பல பறக்கறது... இப்பிடி வர்ரதுக்கு வராமயே இருக்கலாம்...” மனைவி முகத்தைத் தூக்கினாள்.
“அட நீ ஒண்ணு... பத்து நாள்ள ஒலகத்தயே சுத்தி வந்துரலாம். இல்லாட்டித்தா என்ன...? ஊருக்கு வந்து ரெண்டு மாசமாச்சுல்ல... இன்னும் சீராடித் தீரலையாக்கும்...?”
“ஆமா...! இப்பத்தா கலியாணமாயி மறுவீடு வந்திருக்கோம் சீராடறதுக்கு...? உள்ளூர்ல இருந்தா சொந்தக்காரங்க ஊட்டு நல்லது கெட்டதுக்குப் போகணும். வரணும்... அதாம் போயாச்சே... சொந்தமும் வேண்டா, பந்தமும் வேணாம்னுட்டு... ஒங்களுக்கென்ன... வருவீங்க.... புர்ருனு போயிருவீங்க...! எம்பொண்ணு சீருக்கு வர்ல்லே... எங்கூட்டுப் புண்ணியார்ச்சனக்கி வர்ல்லே... எங்க தம்பி கல்யாணத்துக்கு வர்ல்லேன்னு ஒவ்வொருத்தருக்கும் நாந்தான பதில் சொல்ல வேண்டியிருக்கு...”
உரையாடலின் போக்கும் தன்மையும் திசை மாறுவதைக்கண்ட மாமனார் குறுக்கே வந்தார் “சரி சரி... எல்லா அப்பறம் பேசிக்கலாம். அவருக்கு சுடு தண்ணி போட்டுக்குடு... குளிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்கட்டும்.” மாமனார் முற்றுப்புள்ளி வைத்தார்.
“தண்ணி காஞ்சிருக்கும்... இதா வெளாவிர்ரேன்...” மனைவி குளியலறைக்குப் போனாள். அவன் சூட்கேஸ்களை உள்ளே வைத்துவிட்டு லுங்கிக்கு மாறினான்; டவலையும் சோப்பையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்கு நடந்தான்.
“என்ன... எளச்சுட்டாப்பல இருக்கு...?” என்றார் எதிரில் வந்த அத்தை.
“என்னது... எளச்சுட்டனா...! நானா..? ரண்டு மாச ஓட்டல் சாப்பாட்டுல ஒரு சுத்து பெருத்துட்டேங்கறாங்க எல்லாரும்...” என்றான்.
“திங்கறது பூராவும் ஒடம்புல கொளுப்பாப் போய்ச் சேருது போல...” உரிமையோடு கிண்டலடித்தார் அத்தை. கொங்கு மண்ணுக்கே உரித்தான நையாண்டி. அவன் சிரித்துக் கொண்டே நகர்ந்தான.
குளித்து முடித்து தலையைத் துவட்டிக் கொண்டு வந்தவனுக்கு இட்லி தயாராக இருந்தது. வெள்ளை வெளேரென, பெரிய இட்லிகளிலிருந்து ஆவி கிளம்பியது. மாமாவும் அவனும் சாப்பிட உட்கார்ந்தனர்.
சட்னி வெண்மை கலந்த மஞ்சளாய் இருந்தது. தேங்காய்தான் காரணம். சாம்பார் பருப்பாக இருந்தது. நான்கு இட்டிலிகளை வைத்து சட்னி, சாம்பார் ஊற்றினாள் அவன் மனைவி.
“அப்பா... சட்னின்னா இதுல்ல சட்னி...”
“கிண்டல்தான் வேணாங்கறது...” வெட்டினாள் அவன் மனைவி.
“அட... கிண்டலில்ல, நெசமாத்தான் சொல்றேன்... அங்க எவங்கடையில தேங்காயப் போட்டு சட்னி அரக்கிறான்...? திருட்டுப் பயலுக... வெறும் பொட்டுக்கடலதான்... அதுவும் காலைல அரச்சதையே சாயங்காலம் வரைக்கும் வச்சிருக்கானுக... மத்தியானமானாலே அதுலருந்து ஒரு மாதிரியா வாடையடிக்கும். சாயங்காலமானா... கேக்கவே வேணா. அதச் சொன்னா என்னமோ உன்னய கிண்டல் பண்றேன்னு நெனக்கிற...”
“அந்த ஊசிப் போன சட்னியச் சாப்புட்டுத்தான் ஒரு சுத்துப் பெருத்துப்போயிட்டீங்களோ...?” அடுக்களையிலிருந்து மடக்கினார் அத்தை.
“ஹாஹாஹா... நானாரு...! அதுக்குத்தா இந்தத் தமிழ்க கடைக்கே மத்தியானமோ ராத்திரியோ போகவே மாட்டேன். அட, அப்பிடியே போனாலும் சாப்பாடு, இல்ல ரொட்டி... இப்பிடி சட்னி இல்லாத அயிட்டமா வாங்கிக்கிறது...”
“வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி ஏதாவது இருக்கா...?” அடுத்த விள்ளலை வாயில் போட்டுக்கொண்டே அவன் கேட்டான்.
“இத பார்ரா...! காலைல எதுக்கு வம்புன்னு சட்னி அரச்சு, சாம்பாரும் வச்சுக்குடுத்தா வெங்காயச் சட்னி வேணுங்குதோ தொரக்கி... ரயில்ல காஞ்சு போன வயித்துக்கு ரண்டு இட்லி போயிருச்சில்ல...! கொளுப்பு சேந்துருச்சு...” பேசிக் கொண்டே போன மகளை முறைத்து அடக்கினார் மாமா - “தா... என்ன பேச்சுப் பேசற...? இப்ப ஒனக்குத்தா கொளுப்பு... இருந்தா இருக்குன்னு சொல்லு, இல்லன்னா இல்லன்னு சொல்லு. அத விட்டுட்டு லொள்ளு பேசறியே...” மகளைக் கடிந்தார்.
“அட... விடுங்க மாமா... ஏதோ தமாசுக்குப் பேசுச்சு... நா எதுக்குச் சொன்னேன்னா... ஒவ்வொரு வாட்டி ஊருக்கு வர்றப்பியும் பழனிக்குப் போயிட்டு வரணும்னு நெனக்கிறது...”
அவன் முடிப்பதற்குன் மனைவி குறுக்கிட்டாள் - “எதுக்கு...? சண்முக நதிக்குப் போய், வர்றவங்களுக்கு மொட்டையடிக்கவா...?”
“ஒன்னக் கட்டிக்கிட்டதுக்கு நானல்ல மொட்டை போட்டுக்கணும்...!” மனைவிக்கு பதிலடி கொடுத்துவிட்டு மாமாவிடம் திரும்பினான். “பஸ் ஸ்டாண்டுலருந்து ரெயில்வே டேசன் போற ரோட்டுல... என்ன தியேட்டர் அது... சாமியா... சந்தானகிருஷ்ணாவா... அதுக்கு எதுத்தாப்புல.......”
“அதுக்கு எதுத்தாப்புல `பலவகைச் சட்னியுடன் சூடான இட்லி கிடைக்கும்'னு போர்டு போட்ட ஒரு சின்ன ஓட்டல் இருக்கும். எத்தன சட்னிங்கற...? தேங்காச் சட்னி, சாம்பாரோட, வெங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, இட்லிப்பொடி, மொளகாப் பொடி எல்லாம் வைப்பான். பஞ்சாட்டம் இட்லி... அட... அட... இதத்தான சொல்லுவீங்க..? இதக் கேட்டு கேட்டு காது புளிச்சுப் போச்சு... நானுந்தா எத்தன நாளாச் சொல்றேன்... ஒரு நாளாவது கூட்டிட்டுத்தா போங்களே பாக்கலாம்னு...” அவன் பேசி முடிக்கும் முன் பொரிந்து கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.
“ஒன்னயா... கூட்டிட்டுப் போறதா...! அதுக்குப் பயந்துட்டுதான போகாம இருக்கேன்.”
“ஆமா... நான் வந்து ஒரு ஆயிர ரூவாய்க்கு சாப்புட்டுருவேம் பாரு...”
இருவரின் வேடிக்கைப் பேச்சையும் ரசித்தவாறே இட்டிலிகளை விழுங்கிக் கொண்டிருந்த மாமா குறுக்கிட்டார் - “சரி... சரி... போலாம். ஏம்மா...! கொஞ்ச நேரம் படுத்து எந்திருச்சுட்டு சாயங்காலமா ஒங்கக்கா ஊட்டுக்கு ரெண்டு பேருமாப் போயிட்டு வந்துருங்க... ஊட்டுப் புண்ணியார்ச்சனைக்கு வரலைங்கறதுல ஒங்கக்காவுக்கு ரொம்ப வருத்தம். எதாவது வாங்கிட்டு வந்தியா...?”
“உம்... ஒரு எக்சாஸ்ட் பேன் வாங்கிட்டு வந்திருக்கேன்...”
*
அக்காவும் மைத்துனரும் யூனியன் ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள். மைத்துனரின் அப்பா டெய்லராக இருந்து சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய வீடு அது. அந்தத் தெருவில் லைன் வீடு என்று கேட்டால் யாரும் சொல்லி விடுவார்கள். எட்டு வீடுகள். ஒரே மாதிரி எட்டு ஓட்டு வீடுகள்.
முன்பக்கம் காம்பவுண்டும் நான்கு அடி அகல கேட்டும். உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் ஒரு தென்னை மரம். வலது பக்கம் முனிசிபாலிடி பைப். தண்ணீர் பிடிப்பதற்காக - தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக - வெட்டப்பட்ட ஒரு குழி. தரையிலிருந்து ஒரு அடி கீழே, நீட்டிக் கொண்டிருக்கும் குழாய். வால்வு இல்லை. பித்தளைத் தவலையை வைத்து எடுக்கும் அளவுக்கு அகலமான, ஆழமான குழி. உள்ளே இறங்கி தண்ணீர் பிடிக்க ஒரு படி. இந்த அற்புதமான யோசனையை முதல்முதலாகச் செயல்படுத்திய ஆள் யாராக இருக்கும் என்று ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் யோசனை வரும்.
குழியை அடுத்து கொஞ்சம் இடைவெளி. இங்கேதான் எட்டு வீட்டுக் குழந்தைகளும் பம்பரம், கோலி, பாண்டி எல்லாம் விளையாட வேண்டும். அடுத்து வரிசையாக எட்டு வீடுகள். தெருவைப் பார்க்காமல் காம்பவுண்ட் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்ட வாசல்களுடன் எட்டு ஓட்டு வீடுகள். முன்பக்கம் எட்டுக்குப் பத்து சைஸில் ஒரு ரூம். அதையொட்டி பத்துக்குப் பத்து சைஸில் இன்னொரு ரூம். அடுத்து ஆறுக்குப் பத்து சைஸில் ஒரு சமையலறை. வாசலுக்கு மட்டுமே கதவு. மற்றதெல்லாம் தடுப்புச் சுவர்போல ஏற்பாடு. அவரவர் வசதிக்கேற்ப முன் அறைக்கு ஸ்கிரீன் போட்டிருப்பார்கள். ஒரே மாதிரியான எட்டு வீடுகளையும் கடந்தால் பொதுவாக நான்கு குளியலறைகள், நான்கு கக்கூசுகள்.
முதல் இரண்டு வீடுகளைத் தவிர ஆறும் வாடகைக்கு விடப்பட்டவை. முதல் வீட்டை அக்காவீட்டார் புழங்கி வந்தனர். இரண்டாவது வீடு பெரும்பாலும் மூடப்பட்டேயிருக்கும். இரவில் மட்டும் அக்காவின் மாமனார் மாமியார் அங்கே படுக்கச் செல்வார்கள். யாராவது உறவினர் வந்தால் பயன்படுத்துவார்கள்.
இருவரும் அக்கா வீட்டுக்குப் போனபோது வீட்டில் அக்கா மட்டுமே இருந்தாள். மைத்துனர் ஆபீஸில் இருந்து வந்திருக்கவில்லை வாசலில் மொபெட் இருக்கவில்லை.
“வா...வா...வா... எப்ப வந்தே...?” கதவைத் திறந்த அக்கா வரவேற்றாள்.
“காலைலதான் வந்தேங்கா... எங்க மச்சானக் காணம்...? பொண்ணக் காணம்...?”
“அவரு இன்னம் ஆபீஸ்லேர்ந்து வர்ல. பொண்ணு ட்யூசனுக்குப் போயிருக்கா. ஆறு மணிக்கு வந்துருவா. எப்பிடியிருக்கு வீடு...?”
முகத்தில் மலர்ச்சியா? பெருமிதமா?
வீடு மாறிப் போயிருந்தது. முதலிரண்டு வீடுகளின் இடத்தை புதிய கான்கிரீட் வீடு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தெருவிலிருந்து பார்த்தால் ஓட்டுவீடுகள் தெரியாது. தெருவைப் பார்த்த கதவு. குழந்தைகள் விளையாடுமிடத்தை விழுங்கி விட்ட வாசல்.
நுழைந்ததும் முதலில் இருந்த ஹாலில் புதிய சேர்களும் சோபாக்களும் இருந்தன. அந்த ஹாலிலிருந்தே மாடிக்குப்படிகள் போயின. உள்ளே டைனிங் டேபிளும் சேர்களும் கண்ணில் பட்டன. தரை மொசைக் போடப்பட்டிருந்தது. “எங்க மாமியார் மாமனாரக் காணம்...?”
“அவங்க மதுரக்கி பொண்ணு ஊட்டுக்குப் போயிருக்காங்க. ஒரு வாரமாகும் வர. வா, உள்ள வந்து பாரு...”
டைனிங் ஹாலையொட்டி சமையலறை. கிரேனைட் போடப்பட்ட சமையல் மேடை. மிக்ஸி வைக்க, கிரைண்டர் வைக்க ஸ்டாண்ட். மூலையில் கேஸ் சிலிண்டர் ஒரு பூதம் போல் ஒளிந்திருந்தது. மேலே வென்டிலேஷனுக்கு ஓட்டை இருந்தது. பக்கத்தில் மூடிய பவர் பாயின்ட் ஒன்று தெரிந்தது. எக்சாஸ்ட் ஃபேனுக்கு என்று புரிந்தது.
டைனிங் ஹாலின் மற்றொரு பக்கம் கதவு வைத்த அறை. கட்டில்கள் போடப்பட்டிருந்தன. வார்ட்ரோப் ஒன்றும் ஸ்டாண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தன.
“இது மாமியார், மாமனாருக்கு. மேல படியேற வேண்டியதில்ல பாரு...”
“உங்க ரூம் எங்க...? மேலயா...”
“வா. மேல போலாம்.”
சுழன்று போயின படிக்கட்டுகள். படிகள் உயரமாக இருந்தன. மாடியில் தெருவைப் பார்த்தவாறு ஒரு சிட் அவுட். கீழே இருந்தது போலவே ஒரு ஹால். அதன் ஒரு மூலையில் டி.வி. இன்னும் கண்ணாடி போடப்படாத ஷோ கேஸ், அலங்காரப் பொம்மைகள். புதிய பேன். மடக்கு நாற்காலிகள்.
ஹாலை அடுத்து அதன் இரண்டு பக்கமும் நடை. ஒரு பக்க அறையில் இரட்டைக்கட்டில், காத்ரேஜ் டேபிள், சேர், டேபிள்மீது புத்தகங்கள். அந்த ரூமிலும் வார்ட்ரோப், ஒரு ஸ்டாண்ட். மற்றொரு பக்கம் பாத்ரூம், டாய்லெட், அதையொட்டி ஒரு சின்ன அறை. அங்கும் ஒரு கட்டில், சேர், டேபிள், புத்தகங்கள். பாடப்புத்தகங்கள்.
“இது பொண்ணோட ரூமா...?”
“ஆமா... எப்பிடியிருக்கு...?”
“பர்ஸ்ட் கிளாஸ்... நல்லா சுத்தமா வச்சிருக்கா...” என்றான் இவன். படியிறங்கிக் கீழே வந்தார்கள். அப்போதுதான் நுழைந்தார் மைத்துனர். “அடடே... வாங்க... வாங்க... வாங்க... எப்ப வந்தீங்க...?”
“வாங்க வாங்க கடந்தான்... காலைல வந்தேன்... எப்பிடியிருக்கீங்க...?”
“புண்ணியார்ச்சனக்கி வருவீங்க வருவீங்கன்னு பாத்துட்டேயிருந்தோம். நீங்க வராதது ஒண்ணுதா கொற... மத்தபடி எல்லாரும் வந்திருந்தாங்க...”
“லீவு கெடக்கிலீங்க... என்ன பண்றது...? எல்லா நல்லா நடந்துச்சுல்ல... அதா வேணும்...”
“ஆண்டவம் புண்ணியத்துல நல்லா முடிஞ்சுது. சரி... எப்பிடியிருக்கு வீடு...”
“நா என்னங்க சொல்ல... ஒங்களுக்குத் தெரியாததா... ஒண்ணொண்னையும் யோசனை பண்ணிச் செஞ்சிருக்கீங்கன்னு பாத்தவுடனே தெரியுதே... இந்த மாடிப்படிதான்... ஏன் இவ்வளவு உயரமா வச்சிட்டீங்க...?”
மைத்துனர் விவரிக்க ஆரம்பித்தார். முதலில் ‘ட’ வடிவத்தில் படிகள் அமைத்தது, அதனால் நிறைய இடம்பிடித்தது, மாடியில் சிட் அவுட் இல்லாமல் போனது, ஆகவே படிகளை இடித்து சுழல் வடிவத்தில் அமைத்தது, கூடுதலாக எட்டாயிரம் ரூபாய் செலவானது... இவன் உம் கொட்டியவாறு கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஏன் இன்னும் டிஸ்டம்பர் பூசலே...?” ஏதாவது கேட்க வேண்டுமே.
“அது... நீங்கதா சொன்னீங்களே - வாங்க வாங்க கடந்தான்னு... எஸ்டிமேட் போட்டது ஒண்ணரை. கடசீல பாத்தா ஒண்ணு எளுபதாயிருச்சு. பி.எப். லோன் போடக் கூடாதுன்னு நெனச்சிட்டிருந்தேன்... கடசீல போட வேண்டியதாயிருச்சு... அதனால டிஸ்டம்பர் வேலய நிறுத்திட்டேன். இன்னும் ரெண்டு மாசத்துல பளைய கடன் ஒண்ணு திரும்பி வரும். அதுல பெயின்டே அடிச்சுரலாம்னு இருக்கே... நீங்க என்ன சொல்றீங்க...? டிஸ்டெம்பர் அடிக்கலாமா? பெயின்ட் அடிக்கலாமா...?”
‘சிக்கலில் மாட்டிக் கொண்டேனா?’ என்று நினைத்துக் கொண்டான்.
“அதுல பாருங்க... பெயின்ட் அஞ்சு வருச வரைக்கு வரும்கிறாங்க. ஆனா டிஸ்டம்பர் ரெண்டு வருசந்தா வருமாம். ஆனா... காஸ்ட் பாத்திங்கன்னா டிஸ்டம்பர் அடிக்க ஆகறதப் போல அஞ்சு மடங்கு ஆகும் பெயின்ட் அடிக்க. என்னயக் கேட்டா டிஸ்டம்பர்தான் பெட்டர்னு நெனக்கிறேன்...” அவனுக்குத் தெரியும் அவர் பெயின்ட்தான் அடிக்கப் போகிறார் என்று.
அக்கா பிஸ்கட்டும் டீயைக் கொண்டு வந்து வைத்துவிட்டு சேர்ந்து கொண்டார். எதிர்பார்க்காமலேயே பேச்சு மறுபடியும் ‘வீட்டில்’ போய் நின்றது.
பழைய வீடு இடிக்கப்பட்டது, அஸ்திவாரம் நான்கடிக்குப் போடப்பட்டது, செங்கல் வாங்கி அடுக்கிய மாலையிலையே பலத்த மழை பெய்து செங்கற்களை நன்றாக நனைத்து விட்டது, அதனால் கட்டிடம் உறுதியாக உதவியது, மழையின் காரணமாக சிமெண்ட் மூட்டைகளை இறக்க முடியாமல் வேன் ஒருநாள் முழுக்க தெருவிலேயே நின்றிருந்தது, வீட்டு வேலை துவக்க நினைத்தபோது சொல்லி வைத்ததுபோல் மழை நின்று போனது, தண்ணீருக்குப் பிரச்சினையே இல்லாமல் போனது, மரம் வாங்கப் போன இடத்தில் ஆசாரி கமிஷன் அடிக்கப் பார்த்தது, பழக்கமான கடைக்காரர் ஆசாரியின் குட்டை உடைத்து விட்டது, வேறு ஆசாரி வைத்து கதவுகள் செய்தது, ஜன்னலுக்கு இரும்பு கிரில் டிசைனை அக்காவே வரைந்தது, அந்த டிசைன் இன்று நகரமெங்கும் விரும்பிச் செய்யப்படுவதாக ஆகிவிட்டது, கான்கிரீட் கூரைக்கு குடும்பமே மாறி மாறித் தண்ணீர் விட்டு கவனித்துக் கொண்டது, ஷோகேஸ் கண்ணாடிகளின் மீது இரும்புச் சட்டி விழுந்து அத்தனையும் நொறுங்கி விட்டது, அதனால் இன்னும் கண்ணாடிகள் மாட்டப்படாமல் இருப்பது, மேஸ்திரி, கொத்தனார், சித்தாள் என ஒவ்வொருவருக்கும் புண்ணியார்ச்சனையின் போது வேட்டி சேலை வைத்து ஐநூறு ரூபாயும் கொடுத்தது, விருந்துக்கே முந்நூறு பேருக்கு மேல் வந்திருந்தது.... அவன் எல்லாவற்றையும் உம் கொட்டியவாறு கேட்டுக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அக்காவின் பெண் வந்து விடுவாள். வாசலையே பார்த்தவாறிருந்தான்.
வந்தவள் மகிழ்ச்சியுடன் ஓடிவந்து மடியில் அமர்ந்து கொண்டாள். “உம்... மொதல்ல முகத்தக் களுவீட்டு வா” என்ற அக்காவின் கட்டளைக்குப் பணிந்து உள்ளே போனாள். வந்தவளுக்கு ஹார்லிக்ஸ் தயாராக இருந்தது. அவளும் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் குடித்ததும் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருள்களை நீட்டினான். தாங்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டு ஹோம் ஒர்க் எழுத மாடிக்குப் போய்விட்டாள்.
*
வீட்டுக்குத் திரும்பும் போது அவன் மௌனமாக நடந்தான்.
“என்ன யோசன..? நம்ம எப்ப ஊடு கட்டுவோம்னா...?”
“ஊஹூம்...” அவன் தலையாட்டினான். “...நா எப்பவும் வீடு கட்ட மாட்டேன்... ஒனக்கு ஞாபகமிருக்கா...! முன்னயெல்லாம் அக்கா ஊட்டுக்குப் போனா... நேரா உள்ள போய் உக்காந்திருப்போம். சமயத்துல உள்ள போய் டப்பாவத் தொறந்து வேணுங்கறத எடுப்போம். நா ஏதாவது குறும்பாப் பேசுனா அக்கா `நறுக்'குனு குட்டும். பொண்ணு என்னப்பாத்ததும் உப்பு மூட்டை ஏறும்... இப்ப...! ஏதோ அன்னியமாட்டம் டிராயிங் ரூம்ல ஒக்காந்துட்டு வரணும்...''
“ஆமா... ஒங்களுக்கென்ன தெரியும்...? இங்க எல்லா எவ்வளவு முன்னேறிட்டாங்க... நீங்கதா இன்னும் பளய காலத்துல இருக்கீங்க... எப்பப் பாரு! ‘அப்ப எப்பிடியிருந்தது தெரியுமா... இப்பிடியிருந்தது தெரியுமா’ன்னு பளய கதைய உடுறது...” - மனைவி சொன்னாள்.
அவன் மௌனமாக நடந்தான். ‘அப்படியா... எனக்குத்தான் தெரியாது போயிற்றா... நான் பின்தங்கி விட்டேனா..?’
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, மௌனமாக நடப்பதைத் தவிர.

கருத்துகள் இல்லை: