வியாழன், 6 நவம்பர், 2014

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் 2005

பெண்ணே உனக்காக

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கை என்றாலே, பலருக்கும் நீதிமன்றம், வக்கீல், கைது, போலீஸ், என பெருங்கற்பனைகள் கண் முன் வந்து போகிறது.
பலருக்கும் தெரிந்த புள்ளி விவரம்தான்.. சராசரியாக இரண்டில் ஒரு பங்காக இருக்கும் பெண்கள் உலக உழைப்பில் மூன்றில் இ்ரண்டு பங்கு செய்கின்றனர். உலக வருமானத்தில் நூறில் ஒரு பங்கையே அவர்கள் பெறுகின்றனர். (ஆமாம், 1/100 தான்) உலக சொத்தில் 1/100 பங்கே அவர்கள் பெயரில்..
வன்முறை என்பது பெரும் அளவில் உடல்காயம், அடிதடி, ரத்தம் இவைமட்டுமல்ல. கொடுஞ்சொற்களைப் பேசுதல், ஒருபெண்ணை நடுராத்திரியில் வீட்டை விட்டு வெளியேற்றுதல்.. அவளுடன் எதுவுமே பேசாமல் அவள் இருப்பை அலட்சிய்ம் செய்தல என எல்லாமும்தான்.
குடும்பத்தில் வன்முறை என்றால், உடனே வன்முறை செய்தவர் கைது செய்யப்படுவதில்லை இந்த சட்டப்படி.. இந்த சட்டம் வந்த நோக்கம் என்னவென்றால், பெண்ணொருத்திக்கு வன்முறையற்ற குடும்ப அமைப்பை சூழலை ஏற்படுத்தித் தருவதே.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கெதிராக வன்முறை நடந்தால், அதற்கான தீர்வைத தேடாமல், அந்த குடும்பமும் சரி அந்தப் பெண்ணும் சரி. அவளைச் சார்ந்தவர்களும் சரி, அந்த பிரச்சினையை எப்படி மூடி மறைப்பது என்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். காரணம் குடும்ப கெளரவம் என எதோ ஒன்று.
இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்திலும் குடும்ப நலத்துறையின் கீழ் ஒரு குடும்ப நலத்துறை அதிகாரியாக ஒரு பெண் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.
வன்முறைக்குள்ளாகும் பெண் குறித்து எவர் வேண்டுமானாலும், இவரிடம் புகார் அளிக்கலாம் புகார்ளித்தவரின் பெயர் வெளியிடப்பட மாட்டாது என்பதால் அது குறித்த அச்சம் தேவை இல்லை.
அல்லது அந்தப் பெண்ணே புகார் அளித்தவராக இருக்கையில் பிரச்சினையுடன் வரும் பெண் முதலில் ஆற்றுப்படுத்தப்பட்டு, பிரச்சினையை இரு தரப்பும் பேசித் தீர்க்க ஏற்பாடாகவே இந்த குடும்பனல அலுவலகத்தின் செயல்பாடு அமைகிறது.
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குடும்ப நல அலுவலராக இருப்பவர், வன்முறை நடந்ததாகச் சொல்லப்பட்ட இடத்திற்கே சென்று மறமுகமாக விசாரணை நடத்துகிறார். இவரது ரிபோர்டின் அடிப்படையில், இரு தரப்பும் ஒரு நாள் குறிக்கப்ப்ட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள்.
சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் கிராமங்களில், பெரியவர்கள் முன்னிலையில் அந்தப் பிரச்சினை பேசப்பட்டு, தம்பதிகளுக்கும். அந்த குடும்ப உறுப்பினர்க:ளுக்க்கும் அறிவுரை வழங்கப்படும்.
அதன்படி அவர்கள் நடக்காமல் போனால், என அவர்கள் ஊர் பெரியோர்களால் கண்காணிக்கப்படுவார்கள். பிறகும் வன்முறை தொடர்ந்தால் மறுபடி பெரியோர்கள் ஒன்று கூடி ஆவன செய்வார்கள். அல்லவா?
அதையேதான் இந்த சட்டமும் செய்கிறது..அதை குடும்ப நல அலுவலகம் மூலம் செய்கிறது அவ்வளவே.
பல பிரச்னைகள் இருதரப்பு பேச்சின் மூலமாகவும், அந்த பிரச்னை குறித்த, குடும்பனல அலுவலரின் அறிவுரை காரணமாகவும், நேர் செய்யப்பட்டு தீர்வும் கிடைக்கிறது,
ஆனால், அதன் பின்னும், பிரச்னை தொடருமானால்., அந்த குடும்ப நல அதிகாரியின் மூலம், சட்டரீதியான நடவடிக்கை துவங்குகிறது.
அது Domestic Incident Report மூலம் துவங்குகிறது.
நீதிமன்றம் எனில் அதற்கான வழக்கறிஞரை இலவசமாக நியமித்துக் கொடுப்பது வரை இந்த சமூக நல அலுவலரின் கடமை நீள்கிறது.
இது வரை எந்த சட்டமும் அளிக்காத "பெண்களுக்கான இருப்பிட உரிமைக்கு இந்த சட்டம் வழி செய்கிறது. இது ஒரு உரிமைக்கான உரிமையியல்சட்டம் ,கிரிமினல் சட்டம் இல்லை. எனவே, வன்முறை செய்த ஆணை, மற்றும் மற்றவர்களைக் கைது செய்வதும், ஆணுக்கு தண்டனை பெற்றுத் தருவது இதன் நோக்கம் அல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வன்முறையற்ற குடும்பச் சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும்.
இந்தச் சட்டத்தின் படி அந்தப் பெண்ணுக்கு பல தீர்வழிகள் உண்டு.
முதன்மையானது குடியமர்வு உத்தரவு.
குடியமர்வு உத்தரவு எனில், எப்பா குடும்ப சண்டைகளிலும் ஆண், அந்தப் பெண்ணைப் பார்த்து, "வீட்டை விட்டு வெளியேறுமாறு துரத்துதல்” நடக்கிறது. இந்த சட்டத்தின்படி, பெண் குடியிருக்கும் வீட்டிலிருந்து அவளை எக்காரணம் கொண்டும் வெளியேற்ற முடியாது என தடை உத்தரவு வாங்குதல், அதாவது அவள் குடித்தனம் நடத்த வந்த வீட்டிலிருந்து அவளை யாரும் வெளியேற்ற கூடாது என அவளின் உரிமையை நிலைனாட்டுதல்.
உண்மையில் சொல்லப்போனால், அவளைத் துன்புறுத்தும் ஆண், வன்முறை செய்யும் ஆண், அந்த வீட்டிற்குள் வரக்கூடாது என அவள் சொல்லவும் இயலும் என்கிறது இந்தச் சட்டம்.
அடுத்தது பாதுகாப்பு உத்தரவு. அதாவது, அந்தப் பெண்ணை எந்த வகையிலும் துன்புறுத்தக்கூடாது, அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் தருபவர்களுக்கு தொந்தரவோ அவளோடு இருக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இடையூறோ செய்யக்கூடாது என தடை உத்தரவு வாங்க முடியும். அதுவே 'பாதுகாப்பு உத்தரவு.”
அந்தப் பெண் வாழ்ந்த வாழ்வின் பொருளாதார தரத்தையும், அந்த ஆணின் சம்பாத்யத்தையும் வைத்து, அந்த ஆண் அவள் குடித்தனம் நடத்தவோ, அவளின் குழந்தைகளை கவனிக்கவோ பணம் தரவில்லை எனில், அவனிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரும் வகையில் அமைவதே "பொருளாதார உத்தரவு”
அதே போல, குழந்தைகளை, வன்முறை செய்த ஆண், பறித்துச் சென்றுவிட்டால், அவனிடமிருந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தி, குழந்தைகளை அந்தப் பெண்ணிடமே கொண்டு வந்து சேர்க்குமாறு உத்தரவிடும் 'பாதுகாப்பு உத்தரவு” .இதுவும் இந்த சட்டத்தின் மூலம் பெண்ணுக்குக் கிடைக்கும் ஒரு தீர்வழியே. குழந்தை யாரிடம் இருக்க்க வேண்டும்.. எனும் கேள்விக்கான பதில் சட்டபூர்வமாகத் தீர்வாகும் முன்பாக, முதலில் அந்தக் குழந்தைகளை எவரும் அவளிடமிருந்து பறிக்க இயலாதபடி செய்வதே இந்த தீர்வழி.
அது வரை அந்தப்பெண் அனுபவித்த உடல் ரீதியான மன ரீதியான துயரங்களுக்காக இழப்பீட்டு நிவாரணமும் பெறலாம்.
இவற்றை எல்லாம் அறிந்ததும் பொதுவாக எல்லாருக்கும் எழும் கேள்வி..என்னவென்றால், குடும்ப வன்முறை என்பது பெண்ணுக்கு மட்டும்தானா? ஆணுக்கில்லையா? ஆண் இந்த சட்டத்தின் கீழ் தீர்வழி பெற வாய்ப்பில்லையா? அவன் புகார் அளிக்க இயலாதா என்பதே.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஆணுக்கு புகார் அளிக்க, தீர்வழி பெற வழி இல்லை. ஏனெனில், பெண்ணுக்கு நிகழும் வன்முறை என்பதில் அதிக சதவீதம் குடும்பம் எனும் அமைப்பிற்க்குள்ளேதான் நிகழ்கிறது. எனவே பெண் மட்டுமே இந்த சட்டத்தின் அடிப்படையில் புகார் அளிக்க இயலும்.
அரிதிலும் அரிதாக ஆணுக்கு குடும்ப வன்முறை நிகழ்ந்தால் , இன்னபிற சட்டங்களின் அடிப்படையில் அவனாலும் தீர்வழி பெற இயலும்.
ஆக இந்த சட்டத்தின் கீழ் பெண் மட்டுமே புகார் அளிக்க இயலும்.
ஒரு பெண் ஆணுக்கு எதிராக மட்டும்தான் இந்தப் புகாரை அளிக்க இயலுமா?
ஆமாம். ஆணுக்கு எதிராக மட்டுமே புகார் அளிக்க இயலும். அதாவது இன்று இருக்கும் குடும்ப அமைப்பில், பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் ஆண் அதைச் செய்யத் தவறியதாலேயே இந்த வன்முறை நிகழ்கிறாது. அதாவது, திருமணமான ஒரு பெண், அவளின் மாமியாரால் கொடுமைபடுத்தப்பட்டாலும், அந்த கொடுமையை எதிர்த்துக் கேள்விகேட்காத, தன் மனைவியை பாதுகாக்கத் தவறிய ஆணே அங்கே குற்றவாளியாகிறான். எனவே, தன் கடமையை செய்யத்தவறிய ஆணுக்கு எதிராகவே இந்தப் புகார் அமையு,ம். ஆனால், அந்தப் பெண், வன்முறை செய்த ஆண் மற்றும் மற்ற வன்முறை செய்த பெண்களையும், வன்முறை செய்த ஆண்களையும் குறிப்பிடலாம்.
ஆக, இந்த சட்டத்தின் கீழ் முதன்மை குற்றவாளியாக ஒரு ஆணே அமைகிறான்.
ஏற்கனவே அந்த தம்பதியரிடையே, விவாகரத்து வழக்கோ, ஜீவனாம்ச வழக்கோ இருந்தாலும், அது இந்தப் புகாருக்கு எதிராக அமையாது.
ஆக, நீதிமன்றத்தில் ஏற்கனவே இருக்கும் விவாகரத்து,ஜீவனாம்ச வழக்கு எந்த வகையிலும் இந்தப் புகாரை பாதிக்காது.
நீதி மன்ற உத்தரவை வாங்கிய பின்னும், அந்த ஆண் அதை செய்லபடுத்த வில்லையாயின், அவனுக்கு ரூபாய் 20000/- ஃபைனுடன் ஓராண்டு சிறையும் கிடைக்கும்.
திருமணம் நிகழாமல் சேர்ந்து வாழும் ஆண் பெண்ணில் இதே குடும்ப வன்முறை நிகழ்ந்தாலும் கூட அந்தப் பெண் இதே தீர்வழிகளைப் பெற முடியும்.
இதுபோக, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும், தத்தெடுத்த பெற்றோருக்குமே குடும்ப வன்முறை நிகழ்ந்தால், அந்தப் பெண்கள் இதே சட்டத்தின் மூலம் தீர்வழி பெறலாம்.
இந்த சட்டத்தின் கீழ் நடக்கும் வழக்குகள் மற்ற வழக்குகளைப் போல் அல்லாமல் முதல் விசாரணைத் தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் தீர்ப்பு பகரப்பட வேண்டும்.
அதாவது, குடும்பத்திற்குள் நிகழும் தனிப்பட்ட பிரச்னையாக இருந்த ஒன்று இப்போது ஒரு சமூகப் பிரச்னையாக அறியப்பட்டு, அதற்கு தீர்வு காணும் முயற்சியாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

நன்றி : அட்வகேட் ஹன்ஸா, திருச்சி
நன்றி: தினமலர் 

கருத்துகள் இல்லை: