ஞாயிறு, 23 நவம்பர், 2014

அன்பு

இந்த நூற்றாண்டின் மிகத்தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தைகளில் ஒன்று அன்பு.
அன்பாக இருப்பது அத்தனை கடினமான ஒன்றா என்ன ?
அன்பு என்றதுமே அதை செயல்ரீதியிலான ஒன்றாக குழப்பிக்கொள்வதால்தான் பிரச்சனையே.
உணர்வுரீதியில் யோசித்தால் அன்பைக்காட்ட ஆயிரம் வழிகள் இருக்கின்றனவே.
ஒரு டிராபிக் கான்ஸ்டபிள்மீது அன்புகாட்ட அவரிடம் சென்று கைகுலுக்கிவிட்டுத்தான் வரவேண்டுமா என்ன ?
நம் வாகனத்தால் அந்த இடத்தில் டிராபிக் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் அது அவருக்கான அன்பில்லையா ?
ஒரு பூவிற்கும் சிறுமியிடமோ பார்வையற்ற ஊதுபத்தி விற்கும் முதியவரிடமோ பத்துரூபாய்க்கு ஏதேனும் வாங்கிக்கொன்டால் அது அன்பின் பட்டியலில் சேராதா என்ன.
சாலையில் பயணிக்கும்போது சந்திலிருந்து சிரமத்துடன் சைக்கிள் மிதித்துவரும் ஒரு பெரியவர் கடந்து செல்லும்வரை சற்று பொறுமையாக இருக்கலாம்.
பாரம் நிரம்பிய கைவண்டி இழுத்துவரும் ஒரு தொழிலாளிக்கு கூட சென்று வண்டியிழுக்கத் தேவையில்லை.
அவர் செல்லும் வரை நாம் காத்திருக்கலாம்.
எதிரில் வரும் யாரென்றே தெரியாத ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்காக மனதுக்குள் ஒரு நொடி சுகப்பிரசவமாகி தாயும் சேயும் நன்றாயிருக்கட்டும் என்று பிராத்திக்கலாம்.
முடிந்தவரை பஸ் கன்டக்டரிடம் சில்லறையாகத் தரலாம்.
பின்னால் வந்து விடாமல் ஹாரனடிக்கும் வண்டிக்கு பாவம் என்ன அவசரமோ என்று கொஞ்சம் வழிவிடலாம்.
மழையில் சாலையோரம் நடந்துசெல்பவருக்கு லிப்ட் கொடுக்காவிட்டாலும்கூட, தேங்கியிருக்கும் மழைநீர் அவர்மீது பட்டிவிடாதபடி சற்று மெதுவாகச் செல்லலாம்.
வீட்டுக்கு வரும் பிளம்பர் எலக்ட்ரீஷியன் தோட்டக்கார்களுக்கு பணிக்கு நடுவே ஒரு கோப்பைத் தேநீர் தரலாம்.
சாலையில் படுவேகத்தில் பைக்கில் செல்லும் இளைஞனின் வயதைப் புரிந்துகொண்டு சபிக்காமல் நல்லபடி வீடுபோய்ச்சேரட்டும் என்று வேண்டிக்கொள்ளலாம்.
கொஞ்சமாநஞ்சமா ஏகப்பட்ட வழிகளுண்டு. இவற்றையெல்லாம் அன்பென்று சொல்லமுடியாதா என்ன.

கருத்துகள் இல்லை: