வியாழன், 4 ஜனவரி, 2018

வாய்ப்புகள்

ஒரு இளைஞன், விவசாயி ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்பி, அவரிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்துச் சொன்னார்... "இளைஞனே நீ என் மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன்" , என்று சொல்ல... அவனும் ஒத்துக் கொண்டான். காளைகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.

முதலில் ஒரு காளை வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த காளை சீறியபடி பாய்ந்து வந்தது.அதைப் பார்த்த இளைஞன், வாலைப் பிடிக்கத் தயங்கி அடுத்த காளையைப் பார்க்கலாம் என்று விட்டு விட்டான்..

சிறிது நேரத்தில் அதை விட பெரிய காளை வெளியே ஓடி வந்தது.பார்க்கவே பயங்கரமான தோற்றம். அவனைக் முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு, இதுவும் வேண்டாம், மூன்றாவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான். ஓடி வந்த காளை அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த காளையைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது..அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான காளைஎலும்பும் தோலுமாய், பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது. இந்த காளையை விடக்கூடாது.இதைத்தான் நான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான். காளை அருகில் வந்ததும், ஒரு தாவு தாவு காளையின் வாலைத் தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான்.

ஆம்....அந்த காளைக்கு வாலே இல்லை !!

நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது, பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புகள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம். ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவற விட்டால் (அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும்).. அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது..

ஆகவே நண்பர்களே, வாய்ப்புகளை பயன் படுத்துவதில்தான் உங்கள் திறமை இருக்கிறது...

#படித்ததும்_ரசித்ததும்

கருத்துகள் இல்லை: