வியாழன், 15 அக்டோபர், 2020

மங்கையராகப் பிறப்பதற்கே

கவிமணி பாடல் மற்றும் பொருள்

 

மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல

மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!

பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்

பாரில் அறங்கள் வளரும், அம்மா!

 

அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து

அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?

கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ

கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?

 

ஊக்கம் உடைந்தழும் ஏழைகளைக் காணில்

உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?

காக்கவே நோயாளி யண்டையிலே - இரு

கண்ணிமை கொட்டா திருப்பவர் ஆர்?

 

சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்

சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?

முந்து கவலை பறந்திடவே - ஒரு

முத்தம் அளிக்க வருபவர் ஆர்?

 

உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்

ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?

அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள்

அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்?

 

நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல

நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்?

ஓதிய மானம் இழந்தவரை - உயர்

உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்?

 

ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து

அன்போ டகலா திருப்பவர் ஆர்?

பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன்

பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்?

 

ஏங்கிப் புருஷனைத் தேடியழும் - அந்த

ஏழைக் கிதஞ்சொல்லி வாழ்பவர் ஆர்?

தாங்கிய தந்தை யிழந்தவரைத் - தினம்

சந்தோஷ மூட்டி வளரப்பவர் ஆர்?

 

சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன்

சேவடிக் கன்பெழச் செய்பவர் ஆர்?

உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு

உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்?

 

மங்கைய ராகப் பிறந்ததனால் - மனம்

வாடித் தளர்ந்து வருந்துவதேன்?

தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத்

தாருவாய் நிற்பதும் நீர் அலவோ?

 

செம்மையிற் பெற்ற குணங்களெலாம் - நீங்கள்

செய்வினை யாலே திருத்துவீரேல்,

இம்மைக் கடன்கள் முடித்திடவே - முத்தி

எய்திச் சுகமா யிருப்பீரே.


பாடலின் பொருள்:


இந்த பூமியில் பெண்களாய் பிறப்பதற்கு உலகத்திலேயே யாரும் செய்யாத பெரும் தவம் செய்திருக்க வேண்டும். இந்த பூமியில் பெண்களின் கைகளைப் பார்த்தது தான் அறமே வளர்கிறது. அவர்கள் இல்லையென்றால் அறம் இல்லாது போயிருக்கும்.

 

இரவு பகல் பாராது அயராது உழைப்பவர் யார்? பெருங்கருணை கொண்ட உள்ளத்தோடு அன்பு ததும்ப எழுவது யார்? உடைக்க முடியாத கல் கூட கனி போல கனிந்து நெகிழ தெய்வத்திடம் உள்ளம் உருகி தொழுபவர் இந்த உலகத்திலே யார்?

 

வாழ வழியின்றி மனம் நொந்து துடிக்கும் ஏழையின் கண்ணீரைக் கண்டால் ஒரு தாயைப்போல மனம் வாடித் துடிப்பவர் யார்? தன் சுற்றத்திலே ஒரு நோயாளி இருந்தால் அவரை காத்திட கண்ணிமைக்காமல் கூட இருந்து பணிவிட செய்து காப்பது யார்?

 

நாம் சிந்திய கண்ணீர் துடிப்பது யார்? நம்முடைய மனதில், எண்ணத்தில் பயம் இருந்தால் அதை அகற்றி நமக்கு தைரியம் அளிப்பது யார்? நம்மை பற்றிய கவலை என்ற நோய் பறந்து விலகிட ஒரு அன்பு முத்தம் தருவது யார்?

 

நம்முடைய மனம் தளர்ந்து சோர்ந்து கிடக்கும் நேரத்தில் நம்மை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் மன உறுதி கொடுத்து செயல்பட வைப்பது யார்தம்முடைய மக்களை மிக்க ஆசையுடனும் அன்புடனும் மடியில் கிடைத்து மேலும் மேலும் அன்பை கொடுப்பது யார்?

 

இந்த உலகத்தின் நீதி நெறிகளை கடைபிடிக்காத ஒரு மனிதனை நல்ல வழியில் நடத்திடும் உள்ளம் கொண்டவர் யார்? வழி தவறி இழிவான செயலில் ஈடுபாடு மற்றவர் மத்தியில் மானம் இழந்து தவிப்பவரை அவர்களிடையே உயர்த்தி நல்லவராக நிறுத்துவது யார்?

 

நம்முடைய இறப்பு நெருங்கும் நேரத்திலும் அன்பு காட்டி நம்மை விட்டு பிரியாது இருப்பவர் யார்? அந்த காலனும் நம்மை நெருங்கிடாமல் காத்திட ஈசன் பாதம் வணங்கி நமக்கு துணையாக இருப்பவர் யார்?

 

தன்னை விட்டுப் பிரிந்த கணவனை என்னை வருந்தும் மற்ற பெண்ணுக்கும் இதமாய் ஆறுதல் சொற்கள் தனது அணைத்து வாழ்பவர் யார்? நம்மை பொன்போல காத்து தாங்கி வந்த தந்தை நம்மை விட்டுப் பிரிந்தாலும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நம்மோடு இருந்து வழி நடத்துபவர் யார்?

 

நாம் சின்னஞ்சிறிய வயதினராக இருக்கும் போதே நமக்கு நல்வழி காட்டும் நீதி நெறி புகட்டி ஈசனின் பாதமே நன்மை தரும் என்று சொல்லி வளர்ப்பவர் யார்? உன்னுடைய இளமைப்பருவம் எல்லாம் எந்த துயரமும் நெருங்காது ஒரு உற்சாகத்தோடும் களிப்போடும் இருக்கச் செய்பவர் யார்?

நீ பெண்ணாகப் பிறந்ததை எண்ணி மனம் தளர்ந்து வாடி வருந்துவது எதற்காக? எல்லோருக்கும் எல்லாமும் வாரி வழங்கிடும் ஒரு கற்பகத் தரு போல இந்த மண்ணில் இருப்பது நீ அல்லவோ பெண்ணே..

 

உங்கள் பிறவியிலேயே பெற்ற பல நல்ல சிறந்த குண நலன்களை நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் வெளிப்படுத்துங்கள். இந்த உலக வாழ்வியில் அதனாலே பல சிறப்புகள் பெற்று நலமாய் உயர்ந்து எல்லோர் முன்பும் இருப்பீர்கள்.

 

(இங்கு யார் ? என்று கவிஞர் கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டுவது பெண்களைத் தான். பெண்களே நீங்கள் தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய ஆற்றல். நீங்கள் இல்லாமல் இந்த உலகில் உயிர்கள் நிலைத்திருப்பது அரிது. எனவே உங்களை நீங்களே என்னடா இது பெண்ணாக பிறந்து விட்டோமே என்று தாழ்வாக எண்ண வேண்டாம்என்ற கருத்தையே கவிஞர் சுட்டுகிறார்)




கருத்துகள் இல்லை: