ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

“உண்மையைச் சொல்லுங்கப்பா...” – பாப்பனப்பட்டு வ.முருகன்


சின்னஞ்சிறு கதை – 7
=====================
குமரவேலனுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. எப்போதுமே தன்னிடம் அதிர்ந்து ஒரேயொரு வார்த்தைகூட பேசாத அப்பா, இன்று தன்னிடம் கடுமையாகப் பேசிவிட்டாரே..! தான் எதைக் கேட்டாலும் மறுப்பேச்சின்றி நிறைவேற்றுபவர், இன்று எடுத்தெறிந்து பேசிவிட்டாரே..! இதன் காரணம் என்னவாக இருக்க முடியும்..?! உண்மை புரிபடாமல் உளைச்சலில் உழன்றுகொண்டிருந்தான் அவன்.
அவர் அப்படி கோபிக்கும் அளவிற்கு தான் தவறொன்றும் செய்யாத நிலையில், ஏன் தன்மீது அவருக்கு இவ்வளவு காட்டம்..?! இத்தனைக்கும் அப்போதுதான் அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில்,அவ்வூர் உயர்நிலைப் பள்ளியிலேயே நாம்தானே 485 மதிப்பெண்களுடன் முதல் மாணவனாகத் தேறி அவருக்கும்,பள்ளி,குடும்பம்,ஊர் என அனைவருக்கும் பெருமையை வாங்கித் தந்திருக்கிறோம்...ஆனால், ஏன் இந்த அப்பா இப்படித் தன்மீது கோபத்தைக் காட்டுகிறார் என்பது புரியாமல் தவித்துக்கொண்டிருந்தான். காலையில் அவருக்கும் தனக்கும் நடந்த உரையாடலை அசைபோடத் துவங்கினான்.
”அப்பா... நான் பத்தாம் வகுப்புல ஸ்கூல்லயே முதல் மாணவனா வந்ததைவிட, பன்னண்டாம் வகுப்புல வந்தாத்தான், பின்னாடி நீங்க நெனைக்கிற மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிச்சி,ஒரு நல்ல வேலைக்குப் போயி, எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ற உங்களை ஒக்கார வச்சி சோறு போடமுடியும்ப்பா...அதனால, நம்ம பக்கத்து ஊருலயிருக்கிற ஹையர் செகண்டரி ஸ்கூல்ல சேர்த்துவிடுங்கப்பா...எங்க வாத்தியாருங்களும், அங்க சேர்ந்து படிச்சா நல்லா கோச்சிங் தருவாங்கண்ணு சொல்றாங்கப்பா...என்னை அந்த ஸ்கூல்லயே சேர்த்து விட்றியாப்பா? – கேட்டுவிட்டு, அப்பா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று அவர் முகத்தை ஆவலோடு நோக்கியவனுக்கு, அவரிடமிருந்து அப்படியொரு சுடுசொல் சட்டென பதிலாய் வந்து தன்னைப் பொசுக்கிப்போட்டுவிடும் என்று எதிர்பார்க்காதவனாய் அதிர்ந்தான்.
“அங்கெல்லாம் சேக்க முடியாது... அந்த ஸ்கூல் உனக்கு வேணாம்... நான் உன்னை வெளியூர்ல இருக்கிற ஆஸ்டல்ல சேர்த்துப் படிக்க வைக்கலாம்னு இருக்கேன்..வீணா ஆசைய வளத்துக்கிட்டு திரிஞ்சி ஏமாந்து நிக்காத...” – சொல்லிவிட்டு காலையில் கிளம்பி வேலைக்குப் போனவர் திரும்பி வரும்வரை, அம்மா பலமுறை கூப்பிட்டும் சாப்பிடப்போகாமல், ’அப்பா அப்படி சொன்னதற்குக் காரணம் தெரியாமல் சாப்பாட்டைத் தொடுவதில்லை’ என்ற வைராக்கியத்தோடு உண்ணாமல் சத்தியாகிரகமிருந்தான்.
அழுகை,பசி என இவற்றோடு குழப்பமான மன நிலையும் சேர்ந்து அவனை அழுத்த, என்ன செய்வதெனப் புரியாதவனாய், வீட்டிலிருந்த, நைந்து பிய்ந்து தொங்கிய பழங்கோரைப்பாயை எடுத்து சாணி மெழுகிய தரையில் விரித்துப் போட்டு படுத்தவன்,அப்படியே எவ்வளவு நேரம் உறங்கிப்போனானோ?! அவன் அப்பா மாலை, வேலையிலிருந்து திரும்பி, அவன் அம்மாவுடன் பேசும்போதுதான் உறக்கத்திலிருந்து விடுபட்டிருந்தான். இருந்தாலும் அம்மா அவரிடம் தான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்க, உண்மை அறியும் பொருட்டு,அப்போதும் உறங்குவதாகவே பாசாங்கு காட்டினான்.
“அப்படி என்னங்க நம்ம புள்ள கேக்கக் கூடாததக் கேட்டுப்புட்டான்னு, காலையில புள்ளய அப்படி மொறைச்சிட்டுப் பூட்டிங்க..?பாவம் புள்ள,அழுது அழுது கண்ணு வீங்கி,சாப்பிடாமக்கூட தூங்கிப்பூட்டான் தெரியுங்களா...?” – அங்கலாய்த்தாள்.
”அடிப்போடி...கூறு கெட்டவளே..! அவன் இன்னைக்கு ஒரு நாள் அழுவறான்னு அவன் சேக்கச் சொல்ற ஸ்கூல்ல சேத்தோம்னு வைய்யி...அப்புறம் ‘ஏம்பா அந்த ஸ்கூல்ல சேத்திங்க’ன்னு நெதோம் அழுதுக்கிட்டு வந்து நிப்பான்... பரவாயில்லியா..? – நிதானமாய்க் கேட்டார்.
”என்ன காரணம்னு உடைச்சி சொல்லாம இப்படி பொடிவச்சிப் பூசிமொழுகுனமாதிரிப் பேசினா எனக்கெப்படிங்க புரியும்..? அவன் அழுவற அளவுக்கு அங்க என்ன புலியும் சிங்கமுமா பாடம் எடுக்கப்போவுது? இல்ல அவன் கூடத்தான் பூதங்களும் பிசாசுகளும் படிக்கப் போவுதா..? இத்தனைக்கும் அது கவருமெண்ட்டு ஸ்கூல்தான்...நமக்கு ஒரு பைசா செலவு கிடையாது...அப்புறம் ஏங்க காலையில அவனை அப்பிடி ஏசினீங்க...” – கொஞ்சம் வெறுப்புடன்தான் கேட்டாள்.
சற்று நேரம் அப்பா மௌனம் காக்க, இதற்குமேலும் பொறுக்க முடியாது என எழுந்த குமரவேலன், நேரிடையாகவே அப்பாவைப் பார்த்து, “இவ்ளோ நேரம் அம்மாவும் நீங்களும் பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்...இப்பவாவது உண்மையைச் சொல்லுங்கப்பா...பிரைவேட் ஸ்கூல்ல பணம் கட்டிப் படிக்கச்சொல்லி நான் கேட்டு அதை நீங்க மறுத்திருந்தா அதுல ஒரு நியாயம் உண்டு...ஆனா கவர்ன்மெண்ட் ஸ்கூல்லப் படிக்க ஏம்பா இவ்ளோ எதிர்ப்புக் காட்றீங்க..?சொல்லுங்கப்பா...” – அவர் கைகளைப் பிடித்து கெஞ்சத்துவங்கினான்.
கலங்கிய விழிகளோடு அவனை ஏறிட்டவர், அவனை வாஞ்சையோடு அணைத்தபடி, ”இவ்ளோ நாளா உன்ன ஒரு வார்த்தைகூட கடிஞ்சி பேசாத நான் காலையில அப்பிடிப் பேசக் காரணம் இருக்குப்பா... நீ சேத்துவிடச்சொல்லிக் கேட்ட அந்தக் ஸ்கூல் வாசல்லதான் நான் செருப்புத் தச்சிக்கிட்டிருக்கேன்ம்ப்பா...அங்க உன்ன சேத்துவிட்டா, உங்கூடப் படிக்கிற மத்தப் புள்ளைங்க என்ன வச்சி உன்ன டெய்லி கேவலமா பேசும்ப்பா...அந்த அவமானத்துல உன் படிப்ப நீ எங்க கோட்டை வுட்ருவியோன்னுதான் அப்பா அப்படிப் பேசிட்டேம்ப்பா...என்னை மன்னிச்சிட்றா தங்கம்...” – என்றவரின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி கரைபுரண்டோடியது.
காரணம் தெரிந்து ஒரு கணம் திடுக்கிட்ட குமரவேலன்,உடனே சுதாகரித்துக்கொண்டு,அப்பாவின் கண்ணீரைத் துடைத்தபடி,”அப்பா... நான் உங்க புள்ளப்பா... நான் படிக்கப்போற வாசல்ல நீ செருப்பு தைக்கிறத நான் எப்படிப்பா தரக்குறைவா நெனைப்பேன்..? இத்தனை நாளா நம்ம குடும்பத்துக்குச் சோறு போட்ற இந்தத் தொழில், இத்தனை நாளா என் படிப்புக்கு உதவின இந்தத் தொழில், இப்ப மட்டும் எப்படிப்பா எனக்கு அவமானமா மாறிடும்..?என் ஸ்கூல் வாசல்ல நீ செருப்புத் தச்சா என் படிப்பு கெடாதுப்பா...இன்னும் நல்லா படிக்கத்தூண்டும்ப்பா... நீ பட்ற கஷ்டத்தை டெய்லி பாத்துட்டுப்போகும்போது, என் படிப்புக்காக அப்பா இவ்வளவு கஷ்டப்பட்றாரேன்னு, மத்தப் பசங்கமாதிரி அரட்டையடிக்காம மேல மேல வெறித்தனமா படிக்கணும்னு தோணும்ப்பா...என்னை நீ செருப்பு தைக்கிற ஸ்கூல்லயே சேத்துவிடுங்கப்பா...” – என்றவனை, “என் வைரம்டா நீ..! நீ ஆசைப்பட்டமாதிரி அந்த ஸ்கூல்லயே சேத்துவிட்றேன்...அங்கயே சேந்து படிடா செல்லம்..” என்று மகிழ்ச்சியோடு அணைத்தபடி உச்சிமோந்தார்.
இருவரையும் கண்களில் நீர் கசிய பெருமையோடுப் பார்த்துக் கொண்டிருந்தாள் குமரவேலனின் அம்மா.

கருத்துகள் இல்லை: