சனி, 17 அக்டோபர், 2020

 

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்

தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)


1.    தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி

          தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

     என்னப்பன் என்னையன் என்றால் - அதனை

          எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

 

2.    தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன

          செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;

     மானொத்த பெண்ணடி என்பான் - சற்று

          மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

 

3.    அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை

          அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;

     குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்

          குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)

 

4.    பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை

          பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;

     வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி

          வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

 

5.    புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது

          பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;

     கள்ளால் மயங்குவது போலே - அதைக்

          கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

 

6.    அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்

          ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;

     எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்

          எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

 

7.    விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்

          வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;

     இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை

          இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

 

8.    அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி

          அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,

     எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்

          யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

 

9.    கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை

          சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;

     ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்

          அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

பாரதியார் 

பாடலின் பொருள்

கண்ணன் மிகவும் சூட்டிகையான விளையாட்டுப் பிள்ளை. அவன் வசிக்கும் தெருவில் இருக்கும் பெண்களுக்கு எல்லாம் எப்போதுமே அவனால் ஓயாத தொல்லை.

அன்பாய் சாப்பிட நல்ல பழம் எடுத்து வந்து கொடுப்பான். அதன் தின்னும் போது பாதியில் தட்டிப் பறித்துக் கொள்வான். என் அப்பா.. என் ஐயா என்று என்ற கெஞ்சி கேட்டால் அந்த பழத்தை கடித்து எச்சில் படுத்திக் கொடுப்பான்.

தேன் போல இனிய பண்டங்கள் எடுத்து வந்து நாம் என்ன செய்தாலும் எடுக்க முடியாத படி எட்டாத உயரத்தில் வைப்பான்..நீ மான் போல அழகான பெண் என்று வர்ணிப்பான் அப்பெண் மனம் மகிழும் நேரத்தில் கிள்ளி விடுவான்.

அழகான பூக்களைக் கொண்டுவந்து காட்டி அதை கொடுக்காமல் அழவைப்பன். பின்னர் நீ கண் மூடிகொள் நான் உன் கூந்தலில் வைக்கிறேன் என்று சொல்லி கண் மூட வைத்து சட்டென்று அந்த பூவை அவளின் தோழிக்கு வைத்து வெறுப்படைய வைப்பான்

பின்னாடி இருந்து பின்னலைப் பற்றி இழுப்பான் உடனே தலையைத் திருப்பி பார்க்கும் போது முன்னால் வந்து நிற்பான். வண்ணம் மிகுந்த அழகான புது சேலைக் கட்டி வந்தால் அதில் புழுதியை வாரி போட்டு அழுக்காக்கி மனதை வருந்த வைப்பான்

புல்லாங்குழல் எடுத்து வந்து இனிமையான அமுது படைப்பது போல மனம் நிறைக்க இனிய கீதம் படிப்பான். கள் குடித்து மயங்கி இருப்பது போல அந்த கீதத்தில் கண் மூடி வாய் திறந்து கேட்டுக்கொண்டு இருப்போம்

வேலை செய்து களைத்து (அங்காந்திருக்கும்) உட்கார்ந்திருக்கும் போது கண்ணன் வந்து வாயிலே ஆறேழு கட்டெறும்பை போட்டு விடுவான். யாராவது எங்காவது இது போல செய்வதைப் பார்த்து இருக்கிறீர்களா? இதெல்லாம் கண்ணன் எங்களை செய்கின்ற வேடிக்கை விளையாட்டுக்கள் ஆகும்

வீட்டிற்கு வந்து விளையாட அழைப்பான். வீட்டில் வேலை இருக்கிறது என்று சொன்னாலும் அதைக் கேட்காது இழுத்து செல்வான். எல்லா சின்ன பிள்ளைகளோடும் நன்றாக குதித்து விளையாடுவான் சட்டென்று யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு சென்று எல்லோரும் விளையாடிக் கொண்டு இருப்பதாக போட்டுக் கொண்டுது நல்லவன் போல இருப்பான்

அவன் தன்னுடைய அம்மாவுக்கு ரொம்ப நல்லவன். வீட்டில் இருக்கும் கணவனை இழந்த அத்தைக்கும் (மூளி) நல்லவன். அதே போல அப்பாவுக்கும் ரொம்ப நல்லவன். பெண்களை துன்பம் கொள்ள வைக்கும் எல்லா பெரியவர்களுக்கும் அவன் ரொம்ப நல்லவன் போல நடிப்பான்.

மற்றவர்களுக்கு இடையே கோள் மூட்டி விடுவதில் ரொம்ப சாமார்த்தியசாலி, பொய் புனைவதிலும், பழி சொல்வதிலும் கூசாத கபடதாரி (சழக்கன் வஞ்சகன்/ கபடன்). ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு வகையில் பேசி எல்லா பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் பகையாக மாற்றி விடுவான் கண்ணன்.


கருத்துகள் இல்லை: