வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கல்வி மதிப்பெண் எடுக்க மட்டும்தானா?


டிச்சவன் பாடம் நடத்துறான், படிக்காதவன் கல்லூரி நடத்துறான் என்று ஆதங்கத்தோடு சொல்லும் நாம், நமது கல்வி முறையில் இருக்கும் குறைபாட்டை கவனிக்க தவறிவிட்டு, பல திறமைசாலிகளை உருவாக்க முடியாமல் பின்தங்கியுள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை கொடுத்த இறைவன் அதை வெளிப்படுத்துவதற்கான திறனை கொடுக்கவில்லை. அதற்காகத்தான் ஆசிரியர்களை கொடுத்திருக்கிறான். அவர்களால் மட்டுமே ஒவ்வொரு குழந்தைகளின் திறமைகளை வெளியில் கொண்டு வரமுடியும்.

நமது நாட்டில் கல்வி முறையை நினைத்தால் மிகவும் ஆதங்கமாக இருக்கிறது. ஏதோ ஒரு குறை இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனென்று சொன்னால் இந்தியாவில் ஒரு மாணவனின் திறமை அவன் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சிறு வயதிலேயே டாக்டராக, விஞ்ஞானியாக, இஞ்சினியராக, தொழில் அதிபராக விரும்பியவன், பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அவன் நினைத்த நிலையே அடைகிறானா.? என்றால் கண்டிப்பாக இல்லை. 100-க்கு 90 சதவீதம் பேர் தங்களின் உண்மையான துறையில் காலூன்ற முடியாமல், வேறொரு துறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
  
சரி, அதிக மதிப்பெண் எடுத்த அனைவரும் திறமையின் அடிப்படையில் மதிப்பெண் எடுத்தார்களா? இல்லை மனப்பாடம் செய்து எடுத்தார்களா? என்பதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு மனப்பாடத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மனப்பாடம் செய்து ஒப்பித்தால் அவன் சிறந்த மாணவனாக கருதப்படுகிறான்.

ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மாணவ பருவத்திலேயே எந்த மாணவனுக்கு எந்த துறையில் ஈடுபாடு இருக்கிறது என்று ஆராய்ந்து, அதே துறையிலேயே ஊக்குவித்தால், அந்த பருவத்திலிருந்தே அவன் அனைத்தையும் கற்று பள்ளி, கல்லுரியில் இருந்து வெளியேறும் தருணத்தில் அந்த குறிப்பிட்ட துறையில் வல்லுனராக வருவான். அதன் மூலம் அவனது வாழ்க்கை எளிதாக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். +2 முடித்த பின் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், எத்தனை மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கிறார்கள்.
90 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் என்ஜினீயராகவும், 95 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் டாக்டராகவும் முடியும் என்றால் உண்மையிலேயே சில நுட்பங்களை தெரிந்திருக்கும் ஒரு திறமையான மாணவன் மதிப்பெண் எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்தால், அவன் புறக்கணிக்கப்படுகின்றான். மெக்கானிக் படிக்காத எத்தனை பேர், என்ஜினீயரிங் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள். அப்படியானால், இந்த கல்விமுறையில் திறமையானவனை இனம் கண்டு, அவனுக்கு ஊக்கம் அளிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
சிறுவயதிலேயே ‘கலெக்டராக போறேன், டாக்டராக போறேன்’ என்று கூறிய எத்தனை சிறுவர்கள் இன்று விரும்பியவாறு இருக்கிறார்கள். அவர்களுடைய ஆசை அதுதான் என்று தெரிந்தும் அதற்கான திறமைகளை வளர்க்க அவர்களால் ஏன் முடியவில்லை. காரணம் அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கல்லூரியில் சேரும் வரை கிடைப்பதில்லை.
இன்றைய சூழ்நிலையில் மதிப்பெண் எடுப்பதற்கு மட்டும் திறமையை வளர்த்துகொண்டால் போதும் என்ற நிலை. படிக்காத மேதை என்று கர்மவீரர் ‘காமராஜர்’ அவர்களை கூறும் நாம், அது போல நிர்வாக திறமை உள்ளவர்களை அடையாளம் காணத்தவறிவிட்டோம். பள்ளியில் படிக்கும்போதே இவர்களுடைய திறமைகளுக்கு முக்கியத்துவம் தர யாருமில்லை. அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும், இல்லை என்றால் பணம் இருக்க வேண்டும் என்ற நிலையில்தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இதற்கு நாம் எப்படி தீர்வு காண்பது என்பதே மிகப்பெரிய கேள்வி.

வெறுமனே படித்து, மனப்பாடம் செய்து எடுக்கும் மதிப்பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை, உண்மையான திறமையான மாணவனுக்கு கிடைப்பதில்லை. குறைவான மதிப்பெண் எடுப்பவன் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவன் அல்ல, மனப்பாடம் செய்ய திறமை இல்லாதவன் அவ்வளவுதான்.
ஆனால், அவனுக்கு வேறொரு திறமை இருக்குமே. அதை ஏன் ஆசிரியர்கள் எவரும் வெளியே கொண்டு வர முயற்சிப்பதில்லை. மதிப்பெண் மட்டுமே ஒருவனின் திறமையை தீர்மானிக்கிறது என்பதை ஜீரணிக்க முடியவில்லை.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதே அவர்களுடைய திறமைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் தங்களிடம் இருக்கும் திறமையை கூட வெளியை கொண்டுவர முடியாமல் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

பைரோஸ் கான்
 (கூத்தாநல்லூர்) 


கருத்துகள் இல்லை: