புதன், 15 ஏப்ரல், 2015

செவ்வக வாழ்க்கை

பரந்த வனம் தின்ற
பசிப்பேய் செவ்வகங்கள்
வெட்டியெடுத்த தோட்டங்கள்
கட்டியெடுத்த வாழ்விடங்கள்
தெருக்கள் கிழிக்கும் நகரங்கள்
வானுயர் குடியிருப்புகள்
வெளிச்ச சாளரங்கள்

வீட்டறைச் செவ்வகங்கள்
பாதுகாப்பின் பெயர் சொல்லி
எழுப்பும் சுவர் சிறைகளில்
மிஞ்சும் துளைகளாய்
கதவுச் செவ்வகங்கள்

ஏதோ ஓர் கட்டில் செவ்வகத்தின்
உணர்ச்சி உச்சத்தில்
உதித்துக் கொண்டே இருக்கின்றன
புதிதான வாழ்க்கைகள்

காகிதச் செவ்வகங்கள்
பணமாய் பத்திரமாய்
படிப்புச் சான்றிதழாய்
மடித்து வைத்திருக்கின்றன
மனித மதிப்பை

விரிந்த உலகம்
கட்டில்லா உணர்ச்சிகள்
கற்பனை எல்லைகள்
இறவா இலக்கியங்கள்
உணரத் தேவையாய்
ஏதோ ஒரு செவ்வகம்
புத்தகமாய் சினிமாவாய்

தொலைக்காட்சி
கணினி
கைபேசித் திரை
சுருங்கிக் கொண்டே செல்லும்
நமக்கான ஒரு செவ்வகத்தை
உற்றுப் பார்த்தபடி
உருகிக் கரைகிறது
காலம்

காத்திருக்கும் செவ்வகங்கள்
கடைசிக் குழியும்
மாலையிட்ட புகைப்படமும்




- ஷான்

கருத்துகள் இல்லை: