செவ்வாய், 30 டிசம்பர், 2014

மதங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றன –சுரண்டலில்

 | இதழ் 119 | 29-12-2014| அச்சிடு அச்சிடு

(பிரச்சினைக்கு பதில் சொல்வது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. பிரச்சினை எது/எங்கே என அறியும் ஒரு முயற்சியே)
நான் கொஞ்சம் நாத்திகம் பேசுவேன். ஆனால், உள்மனசு 100சதவீத நாத்திகம் பேசுகிறதா எனக்கேட்டால் தெரியாது. ஆனாலும் நான் நாத்திகம் பேசுவேன். சத்தமாகவே. சமீபமாக என்னை உற்றுக் கவனித்தபோது, அந்த நாத்திகத்தில் ஒரு கோவம், வெறுப்பு இருப்பதைப்போல உணர்ந்தேன். இதே கோவம் என் தோழியர் பலரிடமும் பார்க்க முடிந்தது.
என்னைப் போலவே அவர்களும். ஏன்..? தெரியவில்லை.
இந்த முறை குடும்பத்தோடு எதோ குடும்ப மூத்தவர்களின் வேண்டுதல் என கோவில்களுக்கு ஒரு பயணம் போய் வந்தோம். என் கணவர் வீட்டு குல தெய்வம் என்றார்கள். மூத்தவர்களுக்காக நான் வாய் மூடித்தான் இருந்தேன். பெருங் குடும்பத்தின் ஒவ்வொரு வீட்டுத் தலைவரையும் கூப்பிட்டு, அர்ச்சனை, செய்து அவர்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது.
கூட்டம் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால், அன்று என்னவோ, அங்கிருந்து நகர்ந்து போய்விட வேண்டும் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. சொல்லிவிட்டுக்கிளம்பினேன். வெவ்வேறு சன்னதிகளுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு, தெப்பக்குளத்தினருகே வந்து உட்கார்ந்திருந்தேன்.
எனக்கு என்னவோ அவமரியாதை நிகழ்ந்த மாதிரி உணர்வு. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் யாரும் எதுவும் செய்திருக்க/சொல்லியிருக்கவில்லை. எல்லாருமே அன்பானவர்கள்தான்.
எனக்குக் கோவில் என்றால் கொள்ளை இஷ்டம். ஏகப்பட்ட கோவில்களின் தலவரலாறு அத்துப்படி. அதன் சிற்பம், சுவற்றோவியம் என எல்லாமே…ஆனால் அந்த கர்ப்பகிரகம், அர்ச்சனை வகையறா மட்டும் ஏனோ ஆத்திரத்தைக் (ஆமாம் ஆத்திரமேதான்) கிளப்பும்.
இன்று வீட்டில் தோட்டக்காரருடன் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் எதோ கோவிலுக்கு நேர்ந்து கொண்டு மாலை போட்டிருக்கிறாராம். அந்த கோவில் அதிக தொலைவென்பதால் இரண்டு வாரம் விடுப்பு கேட்டிருந்தார்.
“பரவால்ல போயிட்டுவாங்க. அது சரி….ஏன் பெரிய சாமி? இங்க பக்கத்தில இருக்கிற சாமிக்கு மாலை போடலாமில்ல? எனக்கும் சிரமமில்லாம இருக்கும்..?” என்றேன் ஒரு சமாதானப் புன்னகையுடன்..
“அதில்லேங்கம்மா….எங்க சாமி ரொம்ப விசேசம். கேக்கிறதெல்லாம் கொடுக்குற சாமி. இந்த சாமிய விட எங்க சாமி ரொம்ப விசேசம்” என்றார்.
கொஞ்ச நேரத்தில் சின்ன முணுமுணுப்பாக, “அங்க எங்க கோவில்ல எங்களுக்கு, எங்கள்ள மூத்தாருக்கு பரிவட்டமெல்லாம் கட்டி…நல்ல மரியாத செய்வாங்கம்மா…மால போட்டவங்களுக்கு ஊரே மருவாத செய்யும்…”
ஹஹ்…..
“மரியாதை”
அங்கே இருக்கிறது பதில். எனக்கான பதில். கோவிலில் அர்ச்சனையில் நான் “ஹன்ஸா அல்ல. அங்கே நான் பெண் வெறும் பெண். இன்னாரின் மனைவி, இன்னாரின் மகள், புருசனின் குலதெய்வம்தான் என் குல தெய்வம். அர்ச்சனையில் புருசனின் கோத்திரம்.”
நன்றி பெரியசாமி. பதிலுக்கு நன்றி.
எங்களிருவருக்குமே, “சீ…சீ….இந்த பழம் புளிக்கும்”
ஜாதி ஒழிப்பை கையிலெடுத்தவரே தலித்தியம் பேச முடியும். அது போலவே, மதங்களை மறுக்கிற ஒருவரே பெண்ணியம் பேச முடிகிறது..
Women in Nepal.
ஏனெனில் மதங்கள் அப்படியான இடத்தையே தந்திருக்கிறது.
மாக்ஸ் வீபர் (1964 – 1920) சொல்படி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியிலான சுரண்டலைக் கைக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அத்தனை மதங்களுமே மறக்காமல் வேறுபட்ட கருத்தில்லாமல் சுரண்டும் இனமாக மனித இனத்தின் ஐம்பது சதவீதமான பெண் இனம்தான்.
ஏனெனில் அத்தனை, அத்தனை மதங்களுமே பெண்ணுக்கு இரண்டாம்பட்ச இடமே தந்திருக்கிறது. இன்னமதம்தான் என பிரிக்கவே வேண்டாம். இந்த விஷயத்தில் அனைத்து மதங்களுமே ஒற்றுமையாகவே இருக்கின்றன
பெண்களுக்கு மனித உரிமைகள் கொடுப்பதாக(!!!)ச் சொல்லும் மதங்களுமே, உரிமைகள் தருகின்றன..ஆனால் நகைப்பிற்கிடமாக ‘பெண்ணியம்” அல்லது ‘பெண்ணூரிமை’ எனும் பததிற்கான பொருளை அர்த்தத்தை மாற்றி விட்டு.. அப்படியாயின் அவை எப்படி மனித உரிமைகள் ஆகும்? அதாவது consent என்பது வெவ்வேறாகிறதல்லவா?
இவை எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் மனிதக் குழுக்கள் இருந்திருக்கின்றன. அவர்களின் தேவையை ஒட்டிய பழக்கங்கள் விதிகளாயின. பின் அந்த விதிகளே சட்டங்களாயின. ஒன்றை கவனித்தோமேயானால், எந்த ஒரு குழுவும் மற்றொரு குழுவுக்கு அறிமுகமாயிராத காலத்தில் அந்தந்த குழு தனக்கேற்ப சரி தவறுகளும் அதை ஒட்டி சட்டங்களும் செய்திருக்கும். அத்தனை குழுக்களும் செய்த சட்டங்கள் அத்தனையும் வெவ்வேறு சரிதவறுகளின் அடிப்படையிலானவை. அவை இருந்த காலம்,இடம்,. இடத்தின் தட்பவெட்பநிலை இவற்றை ஒட்டியமைந்தவை.
ஆனால், அத்தனை குழுக்களிலுமே தவறாமல் இடம் பெறும் ஒன்று எனில் அது பெண்ணை அடக்குவது அல்லது இரண்டாமிடம் தருவது.
அப்படியாயின்?
1. அப்படி ஒரு இரண்டாமிடத்தின் தேவை இருந்ததா?
2. அதை அன்றே அந்தப் பெண்கள் ஏன் எதிர்க்கவில்லை?
தேவை இல்லை எனில் எதிர்க்க முடியாத நிலையில்தான் இருந்திருந்தனரா?
தேவை இருந்ததால் அன்றையப் பெண்கள் எதிர்க்கவில்லை எனில் அது இப்போது ஏன் தேவையானது.?
ஆண்/பெண் உறவு குற்றம். அந்தக்குற்றத்தைத் தூண்டுபவள் பெண். எனவே அந்தப் பெண்ணிற்குக் கட்டுப்பாடுகள் அவசியம் எனும் நோக்கிலேயே இந்து, கிறித்தவர், இஸ்லாம், பெளத்த மதங்கள் பேசுகின்றன.
கிறித்தவ மதத்தை எடுத்துக் கொண்டால், அதில் பாதிரியாராகும் தகுதியே பெண்ணுக்கு இப்போதுதான்..அதுவும் முழு அளவில் இல்லை. ஆண் பாதிரிமார்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆண் பாதிரிமார்கள் வெளி இடங்களில் மத சம்பந்தமில்லாத இடங்களில் மாற்றுடை தரிக்கலாம்.
”மனைவிகளே,கர்த்தருக்குக் கீழ்படிவது போல உங்கள் சொந்தப்புருசருக்குக் கீழ்படிதலாய் இருங்கள்” – எபெசியர் 5அதிகாரம் 22வசனம் (புதிய மற்றும் பழைய பைபிலில்)
”கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். அவரே சரீரத்திற்கும் ரட்சகராயிருக்கிறார்” – எ.பெ. 5.23.
அதாவது சரீரத்திற்கு. பெண்ணின் உடல் எனும் பொருளுக்கு காவலாளி.
ரிக் வேதமும் சரி, பைபிலும் சரி பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து உருவானவள். ..என்கிறது. அதனால் அவள் அவனுள் அடக்கம். அவனின் தேவையைப் பூர்த்தி செய்யும் கடமை அவளுக்கு என்கிறது.
ரிக் வேதத்தின் 8.3.17ல் “பெண்கள் நிலையற்ற புத்திபடைத்தவர்கள். எனவே அவர்கள் நம்பத் தகாதவர்கள்” என்கிறது.
இஸ்லாமோ பெண்களுக்கு ஜமாத்துகளில் எந்த அளவுக்கு பெண்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது.? இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறார்களா அதாவது அதை அவர்கள் எந்த அளவுக்கு அவர்கள் இம்ப்லிமெண்ட் செய்ய முடிகிறது?
கிறிஸ்தவத்தின் பைபிலும், இஸ்லாத்தின்ன் குரானும் போல இந்து பெளத்த மதங்களில் அவர்களுக்கென்று தனி புத்தகம் இல்லாததாலேயே, அவர்களை எதிர்த்து எது சொன்னாலும் அப்படி சொல்லப்படவில்லையே என்க முடிகிறது.
ஆனால் எல்லா மத புத்தகங்களுமே மாறுதலுக்குட்பட்டதாகத்தானே இருக்க முடியும்?
மதங்களே இல்லாத ஆதி சமூகத்தில் தெய்வம் எப்படி வந்திருக்க முடியும்?
மதம் எப்படித் தோன்றி இருக்க முடியும்?
எது அவனை பயப்படுத்தியதோ அதைத் தொழுவதன் மூலம் தன்னை பலப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம்.
எது மனித சமூகத்திற்கு அதன் நீட்சிக்கு உதவியாக இருந்ததோ அதை தெய்வமாக நினைத்திருக்கலாம். பெண் அங்கே முன்னிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதற்கு ஒரே காரணம் அவளின் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்யும் திறன். அதை ஒட்டியே பெண் தெய்வங்கள் தோன்றி இருக்க வேண்டும். ஆதி தெய்வம் என பெண் போற்றப்பட அதுவே காரணமாக இருந்திருக்க முடியும்.
இப்படியாகத்தானே பெண் தெய்வமாகி இருக்க முடியும்?
பின் எப்போதிருந்து ஆண் உச்ச தெய்வமாகவும் அவன் மனைவியாக தொழுபவளாகப் பெண் தெய்வங்கள் என்றாயிற்று?
”பெண்ணைச் சுரண்டுதல்” ஆணின் நோக்கமாக ஆரம்பம் முதலாக இருந்திருக்கவில்லை. அடுத்த தலைமுறையை அவளே உற்பத்தி செய்து (generate) செய்ய இயலும் என்பதால் அவள் பாதுகாக்கப்பட வேண்டியவளாகிறாள். Peternity identification என்பதே கேள்வியாகவே இருந்திராதபோது, பெண்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதும், ஆண்கள் அவர்களுக்கான உணவைத் தேடிவருவதும் ஒரு சமூக செயல்பாடாகவே இருந்திருக்க வேண்டும். இது வெறும் Division of labour மட்டுமே. இது அப்ரஷன் அல்ல. அல்லவா? தேவையின் பால் ஏற்பட்ட ஒரு அட்ஜஸ்ட்மெண்ட். ஆனால், எப்போது அவளின் தேவை மாற ஆரம்பித்ததோ, அந்த வேகத்திற்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட்கள் மாற ஆரம்பிக்கவில்லை என்பதை விட மாறவே இல்லை எனலாம்.
அதை ஏன் பெண் ஏற்றிருந்தாள்? உணவும், பாதுகாப்பும் மனித இனத்திற்கு அன்று போதுமானதாக இருந்தது.
இன்று… அங்கிகாரம் போன்ற பலவும் … மேலும் அவளின் இடத்தை செயல்படுத்த கிடைத்த மாற்றுக்களும்..
மதம் என்பது இப்போது ஒரு பக்தி சந்தை. இதில் வலிமையுள்ளவனே பிழைத்துக்கிடப்பான். ஆகவே, ஐம்பது சதவீத மார்கெட்டை தக்க வைக்க சில மத நிறுவனங்கள் புது வழியைக் கையாள்கின்றன.
பெண்களுக்கென்று தனி சாமி. பெண்களே அதன் அதிகாரிகள். பெண்களே அதன் சடங்குகளைச் செய்யலாம்( !!!)அர்ச்சனை எனும் பெயரில் ஆணின் பின் ஒளிய வேண்டியதில்லை…எனக் கூவிக் கூவி மார்கெட்டிங் செய்கின்றன…பலத்த லாபம்தான். ஆனால்…வந்து விழுபவை வெறும் விட்டில் பூச்சிகள். கூலி வேலை செய்யும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஆட்கள். அனேகர் தனக்குத் தரும் சிறப்புச் சலுகையால் அதிலேயே விட்டில்களைப் போல..
இங்கே இரண்டு லாபம். கட்டுரை ஆரம்பத்தில் சொல்லி இருந்ததைப் போல என் மனசுக்கும், நொந்தே வெந்திருந்த பெரிய சாமி மனசுக்கும்…தோதாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
பெண்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
பெரியசாமிக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
- See more at: http://solvanam.com/?p=37596#sthash.4myEnQHb.dpuf

கருத்துகள் இல்லை: