வியாழன், 22 ஜனவரி, 2015

ஹர்ஷாவின் ஸ்ட்ரெயிட் டிரைவ்....

கிரிக்கெட் வர்ணனை என்று வந்துவிட்டால் ஹர்ஷா போக்லே தனிக்காட்டு ராஜா. மற்ற வர்ணனையாளர்கள் கிரிக்கெட் ஆடிவிட்டு வந்தவர்கள் என்கிற உணர்வோடு பேசுவார்கள். ஹர்ஷாவோ கிரிக்கெட்டின் ஆன்மாவை காதலிக்கும் ஆழமான நபர். வார்த்தை ஜாலம், ரசிக்க வைக்கும் சாதுரியம் என்று கலக்கி எடுக்கும் அவரின் கமெண்ட்ரியில் இருந்து சில கலக்கல் வரிகள் :
ஐ.பி.எல்லில் இஷாந்த் ஷர்மாவின் பந்தை கச்சிதமான ஸ்ட்ரெய்ட் டிரைவாகச் சச்சின் மாற்றிய பொழுது :
"பாடப்புத்தகத்தைத் திறங்கள். பக்கம் 32-க்கு நேராகப் போங்கள்."
தோனி மிட்சல் ஸ்டார்க்கின் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கணத்தில் :
"உலகத்தின் எல்லா நேரமும் இவர் வசம் இருக்கிறது. அவரால் இந்த இடைவெளியில் செய்தித்தாளை கூட வாசித்திருக்க முடியும்."
அசரவைத்த திராவிடின் பார்மை பற்றி :
"திராவிட் தண்ணீரில் நடக்க வேண்டும்" என்று சொல்லுங்கள், "எத்தனை கிலோமீட்டர்?" எனக்கேட்பார்
மாக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தின் பொழுது :
புயல் வேகத்தில் நுழைந்து பின்னவே அவர் விரும்புகிறார். காரை ஓட்ட கொடுத்தால் நான்காவது கியரில் தான் ஆரம்பிப்பார் மாக்ஸ்வெல்!
ஸ்லிப்பில் கேட் செய்யப்பட்ட பின்பும் காத்திருந்த மைக்கேல் கிளார்க் பற்றி :
அனேகமாக நாளைய செய்தித்தாள் தன்னை அவுட் என்று அறிவிக்க அவர் காத்துக்கொண்டிருக்கிறார் என எண்ணுகிறேன்
இந்தியாவின் கடைசி ஆட்டக்காரர் நரேந்திர ஹிர்வானி ஆட வருகையில் இயான் சேப்பல் ,"இவர் எப்படிப் பேட்டிங் செய்வார்?
" என ஹர்ஷாவை கேட்கையில்,
"உலகின் எல்லா அணிகளின் 11-வது வீரர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்கினால் அதிலும் 11-வது வீரராக இவரே வருவார்."
உத்தப்பா, யுவராஜ் சிங் அடித்து நொறுக்கிக்கொண்டு இருந்த பொழுது
புக் கிரிக்கெட் போலத் திறக்கிற பக்கமெல்லாம் சிக்ஸரும், பவுண்டரியுமாகப் பறக்கிறது.
வருண் ஆருண் இறுதி ஆட்டக்காரராகக் களமிறங்கிய சூழலில்,
"கிரிக்கெட் மட்டும்தான் உங்களுக்கு எது சுத்தமாக வராதோ அதைக் கண்டிப்பாகச் செய்யச்சொல்லி உயிரை எடுக்கும் ஒரே விளையாட்டு."
தோனி ஒரு முனையில் பந்துகளை எல்லைக்கோட்டை நோக்கி அடித்து விரட்டிக்கொண்டு இருந்தார். ஒரு பந்து ஸ்ட்ரைக் கிடைத்ததும் சச்சின் மென்மையாக ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்பொழுது,
"ஒரு பக்கம் கசாப்புக்கடைக் காரரும், இன்னொரு பக்கம் அறுவை சிகிச்சை நிபுணரும் நிற்கிறார்கள்."
தோனி இன்னொரு முறை டாசை இழந்த பொழுது,
"இரண்டு பக்கமும் பூ இருக்கிற நாணயத்தைச் சுண்டி விட்டு
தலை கேட்கிறார் தோனி."
திராவிடுடன் இந்தியா தோற்றுக்கொண்டு இருந்த இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் வர்ணனையில் :
இப்பொழுது இந்திய அணியைக் காப்பாற்றக் கூடிய நபர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்து இருக்கிறார்.
CLT20-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இறுதிப் பந்தை திராவிட் எதிர்கொண்ட நொடியில் :
நயம், கவர்ச்சி, அழகான ஆட்டத்திறன் எல்லாம் ஒருங்கே கொண்டிருந்த ஒரு வாழ்க்கை இந்த ஷாட்டோடு முடிவுக்கு வந்தது. ஆனால், எப்பொழுதும் போலத் தேவைப்பட்டதை மட்டுமே செய்திருக்கிறார் அவர்.
பாய்ந்த போலார்ட் ஒரு கேட்சை தவறவிட்ட பொழுது,
"போலார்ட் ஒரு பந்தை பிடிக்காவிட்டால் அது கேட்ச்சே இல்லை!"
அனில் கும்ப்ளே டெஸ்டில் சதம் அடித்த பொழுது :
இந்திய கிரிக்கெட்டின் மிக ரொமாண்டிக்கான தருணம் இது.
மைக்கேல் வாகனின் சுழற்பந்து வீச்சில் 2002-ல் சச்சின் அவுட் ஆனபொழுது,
"என்ன ஒரு அவமானம். வேகமாக மூக்குக்கு மேலே பறந்து வந்த குண்டுகளில் இருந்து எல்லாம் போர்க்களத்தில் தப்பிய வீரன், சொந்த ஊரில் சைக்கிள் மோதி இறப்பதை போன்றது இது. "
சச்சினாக இருப்பதன் கஷ்டம் பற்றி :
"நீங்கள் சச்சினாக இருப்பதின் சிக்கல் நீங்கள் எப்பொழுதும் சச்சினோடு மட்டுமே ஒப்பிடப்படுவீர்கள்."
சச்சினின் அழகான ஒரு ஸ்ட்ரெயிட் டிரைவுக்குப் பின்னர் :
உலகம் இந்த ஷாட்டுக்கு பின்னர் இன்னமும் அழகாகத் தெரிகிறது.
சக வர்ணனையாளர் இயான் சேப்பலிடம் :
"நீங்கள் நிச்சயம் வக்கீலாக முடியாது. நீங்கள் சொல்கிற அனைத்தும் எனக்கு அப்படியே புரிகிறது."
திராவிடை ஏன் சுவர் என்று அழைக்கிறோம் என்பதைப் பற்றி :
திராவிட் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள ஆட வருகிற காட்சியை விட உலகில் அமைதி தரும் தருணம் வேறு இருக்க முடியுமா?
இந்தியா ஏன் பிபா உலகக்கோப்பையில் கலந்து கொள்வதில்லை என்று நாசர் ஹூசைன் நக்கல் அடித்த பொழுது :
"நாசர் நாங்கள் பிபாவில் கலந்து கொண்டு ஒரு வெற்றியும் பெறாமல் முதல் சுற்றோடு வெளியேறுவதை விடப் பங்கேற்காமல் இருப்பது மேல் என்று எண்ணுகிறோம்."
சச்சின் இன்னுமொரு கவர் ட்ரைவ் அடித்த பொழுது :
அந்தப் பந்தின் எல்லாப் பக்கத்திலும் "நீ இப்பொழுது பவுண்டரிக்குப் போ..உன்னை பின்னால் சந்திக்கிறேன்." என்று எழுதப்பட்டு இருந்தது போல
மூலம் :
http://www.scoopwhoop.com/sports/harsha-bhogle-quotes/
- பூ.கொ.சரவணன்

கருத்துகள் இல்லை: